சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது : தமிழில் உரையைத் தொடங்கினார் ஆளுநர்..!
16-வது சட்டமன்றத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 21-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவை செயலாளர் அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டசபையின் முதல் பேரவை கூட்டத்தொடர் சற்று முன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு பேரவைக்கு அழைத்து வந்தார்.
அவருக்கு ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கினர். அவர் தனது உரையை “காலை வணக்கம்” என்று தமிழில் தொடங்கினார். பின்னர், “எளிமையாக வாழுங்கள்” என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தினார். மேலும், “தமிழ் மிகவும் இனிமையான மொழி” என்றும் கூறினார். ஆளுநரின் அருகில் பேரவைத் தலைவர் அப்பாவு அமர்ந்துள்ளார். ஆளுநரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் பேசி முடித்த பிறகு தமிழில் மொழிபெயர்க்க உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.
இந்த கூட்டம் நிறைவு பெற்ற பிறகு எம்.எல்.ஏ.க்கள் அலுவல் ஆய்வு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது, இந்த சட்டமன்ற கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
ஆளுநர் உரையில் தி.மு.க. அரசு அடுத்தடுத்து மேற்கொள்ள உள்ள திட்டங்கள் இடம்பெற உள்ளது. ஆளுநர் தனது உரையில், தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதால் வரும் ஜூலை மாதம் தமிழக அரசின் நிதிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், கொரோனா தொற்று குறைந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.