ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்வு, அரசு ஊழியர்கள் இலவச காப்பீட்டுத் திட்டம், கடன் உதவி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஈட்டிய சரண் விடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசு மீண்டும் ஈட்டிய சரண் விடுப்பு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஈட்டிய சரண் விடுப்பு நிறுத்தம்
இந்த நிலையில் கடந்த 2020 எப்ரல் 25-ஆம் தேதி அதற்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவல் காலகட்டத்தில், நாடே முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டமாக 27.4.2020 முதல் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் தமிழக அரசு நிறுத்தியது. இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
ஈட்டிய சரண் விடுப்பு- அரசாணை வெளியீடு
இதனையடுத்து அரசு ஊழியர்கள் எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதியில் இருந்தும் பணப்பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
யாருக்கெல்லாம் சரண் விடுப்பு பணப்பலன் கிடைக்கும்
இதே போல ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 எப்ரல் 1ம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட காலக்கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















