Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தத்தால் ஒரு சிகரெட்டின் விலை ரூபாய் 72 வரை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

டெல்லியில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் பங்கஜ் செளத்ரி தாக்கல் செய்தார்.
உயரப்போகும் சிகரெட் விலை:
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த கலால் வரிச் சட்டத்திருத்தால் புகையிலை பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, சிகரெட்டின் விலை இனிமேல் அதன் வகை மற்றும் நீளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது.
சிகரெட் மீதான வரியை உயர்த்தியுள்ள இந்த சட்டத்தின்படி, இனிமேல் 1000 சிகரெட்டுகள் தற்போதைய விலையான ரூபாய் 200 முதல் 735 வரையில் இருந்து உயர்ந்து ரூபாய் 2 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 11 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இனிமேல் எவ்வளவு தெரியுமா?
அதேபோல, மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கான 25 சதவீதம் நான்கு மடங்கு அதிகரித்து 100 சதவீதமாக அதிகரிக்ககூடும். குட்கா புகையிலைப் பொருட்களுக்கான வரி 25 சதவீதம் முதல் 40 சதவீதமாக அதிகரிக்கிறது.
சிகரெட் மீதான வரி உயர்ந்துள்ளதால் தற்போது ரூபாய் 18க்கு விற்கப்படும் சிகரெட் இனிமேல் ரூபாய் 72 வரை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. இந்த தாறுமாறான விலை உயர்வுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
ஆதரவும், எதிர்ப்பும்:
இது ஒரு சீரற்ற விலை உயர்வு, இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் இதனால் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறி வருகின்றனர். இந்த விலை உயர்வால் பீடி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிகரெட்டை காட்டிலும் பீடி மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலைப் பொருள் ஆகும்.
இந்தியாவில் மது பழக்கம் உள்ளவர்களை காட்டிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களே அதிகமாக உள்ளனர். இதனால், இந்த விலை உயர்வு தகவல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும், இதனால் சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொருளாதாரத்தில் எதிரொலிக்குமா?
மத்திய அரசு புகையிலைக்கு எதிரான கடும் நடவடிக்கையாக இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான வர்த்தகத்தில் சிகரெட்டும் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை பலரும் கைவிடுவார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்கள் முதல் கிராமப்புறங்களில் உள்ள சிறு பெட்டிக்கடைகள் வரை சிகரெட் விற்பனை என்பது நடந்து வருகிறது. திடீரென இதன் விலை உயர்ந்தால் வர்த்தக ரீதியாக இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.





















