TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
தவெக தலைவர் விஜய் தனக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட நடிகர் அஜித்தின் பெயரை பொது வெளியில் பயன்படுத்துவதற்கான காரணத்தை கீழே காணலாம்.

2026ம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற களத்தில் குதித்துள்ள நிலையில், இந்த இரண்டு கட்சியினருக்கும் போட்டியாக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய்.
அஜித்தை அஸ்திரமாக்கிய விஜய்:
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், வரும் தேர்தலில் தனது ஆதிக்கத்தை காட்டுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராக விஜய் இருந்தாலும் அவருக்கு இதுவரை திரையுலகில் இருந்து எந்தவொரு பிரபலமும் வெளிப்படையாகவே தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை.
எந்தவொரு கட்சியும் இதுவரை விஜய்யுடன் கூட்டணிக்கு முன்வராத நிலையில், அவர் ரசிகர்களின் வாக்குகளை மலைபோல நம்பியுள்ளார். மேலும், தன்னுடைய ரசிகர்களின் வாக்குகள் மட்டும் தனது வெற்றிக்கு உதவாது என்பதால் தன்னைப் போன்ற பிரபல நடிகரின் ரசிகர்களின் வாக்குகளையும் தன் பக்கம் கைப்பற்ற விஜய் வியூகம் வகுத்துள்ளார். அதற்கு அவர் கையிலெடுத்துள்ள அஸ்திரம் அஜித்.
ஏன் இந்த அஸ்திரம்?
தமிழ்நாட்டில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொணடுள்ள ஒரே நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட அஜித் விஜய்க்கு நிகரான புகழ் கொண்டவர். திரையுலகின் பிரபலமான நடிகராக இருந்தாலும் ரசிகர்கள் மன்றம் கலைப்பு, திரைப்படங்களுக்கான இசை வெளியீட்டு விழா இல்லாமல் இருப்பது, ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவது போன்ற செயல்கள் காரணமாக அஜித் மீது அனைவருக்கும் மிகுந்த மதிப்பு உள்ளது. நடிகராக மட்டுமின்றி தனி மனிதராகவும் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜித்.
இதனால், அஜித்தின் ரசிகர்களின் வாக்குகளை தன்வசப்படுத்தினால் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தங்களது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று விஜய் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக, ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் மலேசியா என்றால் நினைவுக்கு வருவது நண்பர் அஜித்தின் பில்லா என்று நேற்று விஜய் பேசினார். அஜித் தனது நண்பர் என்பதை குறிக்கும் வகையிலே தொடர்ந்து நண்பர் என்றே குறிப்பிட்டு பேசி வருகிறார் விஜய்.
ரஜினி ரசிகர்களுடனான மோதல்:
படங்கள் மூலமாகவும், படங்களின் வசனங்கள் மூலமாகவும், பாடல் வரிகள் மூலமாகவும் மாறி, மாறி அஜித்துடன் மோதிய விஜய், அரசியல் நகர்வுகளை மனதில் வைத்தே தொடர்ந்து அஜித்தை நண்பர் என்றே குறிப்பிட்டு வருகிறார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிலே நண்பர் அஜித் என்று குறிப்பிட்டு பேசியிருப்பார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஒரே ஒரு தல என்று அஜித்தை குறிப்பிட்டு பேசியிருப்பார்.
விஜய் அஜித்தின் ரசிகர்களை குறிவைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களே ஆவார்கள். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மிக அதிகளவில் ரசிகர்களை கொண்டவர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் ஆவார்கள். சூப்பர்ஸ்டார் பட்டம் விவகாரத்தில் ரஜினி - விஜய் ரசிகர்களின் மோதல் உச்சத்திற்கு சென்றது. மேலும், ரஜினி கழுகு - காகா கதையை கூறிய பிறகு இந்த சண்டை மேலும் உச்சத்திற்குச் சென்றது.
ரஜினிகாந்த் திமுகவிற்கு மிகவும் நெருக்கமான போக்கை கையாண்டு வருவதாலும் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகள் விஜய்க்கு செல்வது மிகப்பெரிய சந்தேகமே ஆகும். மேலும், ரஜினிக்கு நிகரான புகழ்பெற்ற நடிகரான கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் திமுக கூட்டணியில் உள்ளது.
இதன் காரணமாகவும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை விஜய் குறிவைத்துள்ளார். அஜித் கார் பந்தயத்தில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிய பிறகு அவர் அளித்த ஒரு பேட்டியில் கரூர் சம்பவம் குறித்தும் விளக்கமாக கூறியிருந்தார்.
ரசிகர்கள் வாக்குகளாக மாறுவார்களா?
அதில் விஜய்யின் தவறு மட்டுமே என்று கூற முடியாது என்று அவர் மறைமுகமாக கூறியிருந்ததும், அஜித் கருணாநிதிக்கான பாராட்டு விழாவில் துணிச்சலாக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது உள்ளிட்டவற்றையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தவெக வியூகம் வகுத்து வருகிறது.
விஜய் மற்றும் தவெக அஜித் ரசிகர்களை தங்கள் வாக்குகளாக மாற்றுவதற்கான அஸ்திரம் தேர்தலில் அவர்களுக்கு கைகொடுக்குமா? என்பது தேர்தல் முடிவுகளிலே தெரிய வரும்.





















