Tamil Nadu Day 2024: சிலப்பதிகாரம் முதல் பெரியபுராணம் வரை: பழந்தமிழ் இலக்கியங்களில் ’தமிழ்நாடு’ எனும் சொல் பயன்பாடு
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில், தமிழ்நாடு என்னும் வார்த்தை வஞ்சிக் காண்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 18- தமிழ்நாடு தினம்
மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தமிழர்களுக்கெனத் தனி மாநிலம் உருவான நாளான நவம்பர் 1, தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பழங்காலத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் இலக்கியங்களில் வெவ்வேறு இடங்களில் தமிழ் என்னும் வார்த்தையும் நாடு என்னும் வார்த்தையும் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு என்னும் வார்த்தை சேர்ந்தும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு
குறிப்பாக ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில், தமிழ்நாடு என்னும் வார்த்தை வஞ்சிக் காண்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய - வஞ்சி 25/165
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும் – சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை
பழங்காலத்தில் தொல்காப்பியத்துக்கு முழுவதுமாக உரை எழுதிய இளம்பூரணர்,
நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்
என்று குறிப்பிட்டுள்ளார். இவர் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
கம்பராமாயணத்தில் தமிழ்நாடு
அதேபோல கம்பராமாயணத்திலும் தமிழ்நாடு என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 தமிழ்நாடுகள் என்று சோழ நாட்டையும் சேர நாட்டையும் பாண்டிய நாட்டையும் ஒருசேரக் குறிப்பிட்டுள்ளார். சோழ நாட்டை சோணாடு என்றும் சேர நாட்டை மலை நாடு எனவும் பாண்டிய நாட்டை தமிழ் நாடு என்றும் குறிப்பிடுகிறார் கம்பர்.
மலைநாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ- கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் (கிட்:13 30/4)
இதே நூலில் வேறு சில இடங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் காணக் கிடைக்கிறது.
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் (கிட்:13 31/1)
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் (கிட்:15 50/4
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் (கிட்:15 52/1)
பரிபாடலில் தமிழ்நாடு
சங்கத்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலில் தமிழ்நாடு என்னும் வார்த்தை வருகிறது. பாண்டிய மன்னனின் பொதியில்மலை இருக்குமளவும் மதுரை தமிழ்நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்ற மாட்டாது என்ற பொருள்படும் வகையில்,
தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு
என்ற வரிகளில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சோழன் மெய்க் கீர்த்தியிலேயே தண்டமிழ்நாடன் என்று உள்ளது.
சேக்கிழாரின் மங்கையர்க்கரசியார் புராணத்தில் தமிழ்நாடு
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள் (சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம் )
தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவரானார் - திருநாவுக்கரசர் புராணம் – பாடல் எண் 289
மனக்குலவு தமிழ்நாடு - திருநாவுக்கரசர் புராணம்
அதேபோல பெரிய புராணத்தில் ஏராளமான இடங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1. பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம் - (வம்பறா:1 601/1)
2. நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லைப் பின்பட நெறியின் ஏகி - (வம்பறா:1 608/2)
3. புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர் வண்தமிழ்நாட்டு (வம்பறா:1 653/1,2)
4. தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் - (வம்பறா:1 751/2)
5. தெருள்பொழி வண் தமிழ்நாட்டுச் செங்காட்டங்குடி சேர்ந்தார் - (வார்கொண்ட:3 35/4)
6. செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திரு மா மதுரை முதலான - (வார்கொண்ட:4 81/3)
இந்த நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக உலகப் பொதுமறையாம் திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகம் உள்ளிட்ட எந்தச் சொல்லும் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.