Rain Review : கொட்டி தீர்க்கும் வடகிழக்கு பருவமழை.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆயத்த பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம்..
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல, மழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பொறுத்தவரை செய்யூர், கும்மிடிப்பூண்டி, கிண்டி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், மதுராந்தகம், நெமிலி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-01-08:07:45 அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர்,கும்மிடிப்பூண்டி,கிண்டி,வாலாஜாபாத்,காஞ்சிபுரம்,மதுராந்தகம்,நெமிலி,பொன்னேரி,ஸ்ரீபெரும்புதூர்,உத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/ELySC9tlCI
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 1, 2022
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று ( 01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில் வடகிழக்கு பருவ மழை ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.