TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
TN POLITICS 2025 : தமிழகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டுகளில் பல நிகழ்வுகள் மக்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியையும் அடையவைத்துள்ளது. அதில் அரசியலில் பல நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் பார்த்திராத சம்பவங்களும் அரங்கேறியது...

தமிழகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு அரசியலில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. அதிலும் ஒரு சில சம்பவங்கள் யாராலும் மறக்க முடியாத நினைவுகளாக மாறியுள்ளது. எனவே 2026ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், கடந்த 365 நாட்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சிலவற்றை திரும்பி பார்க்கலாம்...
பாமகவில் பிளவு
புத்தாண்டையொட்டி நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்- அன்புமணி இடையே தொடங்கிய மோதல் கடந்த 12 மாதமாக நீடித்து வருகிறது. ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிப்பு, தாய் மீது அன்புமணி தாக்குதல் என அடுத்தடுத்து அன்புமணி மீது புகார் பட்டியலை வாசித்தார் ராமதாஸ், ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்த மோதலால் பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியும் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தன்னை நீக்க பொதுக்குழுக்கு மட்டுமே அதிகாரம் என பதிலடி கொடுத்தார். இதனையடுத்து நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்ற பாமகவின் உட்கட்சி பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி முடிவிற்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லையென அறிவிப்பை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி, ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2026ஆம் தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் பாஜக- அதிமுக கூட்டணியை டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து மீண்டும் உறுதிசெய்தார் எடப்பாடி பழனிசாமி.
தலைவர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அண்ணாமலை
ஐபிஎஸ் அதிகாரி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் கடந்த 2021ஆம் ஆண்டு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்ணாமலையும் தனது அதிரடி அரசியலால் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்தது. ஆனால் கூட்டணியில் இருந்த அதிமுகவுடன் மோதல் போக்கை மேற்கொண்டார். இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்த நிலையில், இதற்கு இடையூறாக இருந்த அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்- டிடிவி
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், அப்போது பாஜக கூட்டணியில் இணைந்து கை கொடுத்தது ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் மட்டுமே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கான மரியாதை குறைவானது. இதனையடுத்து உரிய மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டோம் என கூறி அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள்.
தாறுமாறாக பேசிய அமைச்சர்கள்- சாட்டையை சுழற்றிய முதலமைச்சர்
அமைச்சராக இருந்த பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள் குறித்து மதத்தோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இது பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், திமுக தலைமை பொன்முடியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது, அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை அமைச்சரவையிலிருந்தும் நீக்கினார்.
அடுத்ததாக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த 2023ஆம் ஆண்டு அமாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த நெருக்கடியால் அமைச்சரவையில் இருந்து மீண்டும் விலகினார். இதனையடுத்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
கரூர் சம்பவம்- 41 பேர் பலி
தமிழக வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்திக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல்லில் கூட்டத்தை நடத்திய விஜய், அடுத்தாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தவெகவின் செயல்லாடுகள் 2 மாதங்களுக்கு மேல் முடங்கியது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா என அதிமுக தலைவர்களோடு பணியாற்றியவர், எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற போது முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்த நிலையில், பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்தார்.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார் செங்கோட்டையன், இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கினார்.
தவெகவில் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்த என்ன செய்யப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்து நிலையில், பாஜகவில் இணைவார் என கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பதாக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அடுத்ததாக தனது கெத்தை காட்டும் வகையில் ஈரோட்டில் மிக பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி அசத்தினார் செங்கோட்டையன்.
வாக்காளர் சிறப்பு திருத்த பணி
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதன் காரணமாக நாடே SIR பணியை திரும்பி பார்த்த நிலையில், தமிழகத்திலும் வாக்காளர் சிறப்பு திருத்த பணி நடைபெற்றது. தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.இந்த பணிகள் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி 97,37,832 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டனர்.





















