Special Train: பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே.. மகிழ்ச்சியில் மக்கள்..!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, புத்தாடைகள் அணிகள் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் வாழ்த்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும் தங்கள் வீடுகளில் உயிரினங்களை இறைவனின் பெயரால் பலிகொடுத்து மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கு வீட்டுக்கும், ஒரு பங்கு அண்டை வீட்டாருக்கும், ஒரு பங்கை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி ஈகைத் திருநாள் விழாவை கொண்டாடுகின்றனர். நாளை இந்த விழா கொண்டாடப்படும் நிலையில் வெளியூரில் உள்ள இஸ்லாமிய மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
சிறப்பு பேருந்துகள்
மேலும் ஜூலை 1, 2 வாரக்கடைசியில் வருவதால் நடுவில் உள்ள வெள்ளிக்கிழமை (ஜூன் 30) விடுமுறை போட்டு தொடர் விடுமுறையைக் கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஜூன் 28) இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (வண்டி எண்:06502) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு 12.43 மணிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நாளை காலை 11.45 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். இதேபோல் திருநெல்வேலியில் இருந்து நாளை (ஜூன் 29) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இதே ரயில் மறுநாள் (ஜூன் 30) அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.