OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
அதிமுகவில் இணைய கடைசி வரை முயன்ற நிலையில், முடியாத காரணத்தால் ஓபிஎஸ் ஆதரவாக இருந்த நிர்வாகிகள் வேறு வழியில்லாமல் திமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அசைக்கமுடியாத கட்சியாக இருந்தது அதிமுக, இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா திடீரென காலமானார். இதனையடுத்து அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்ற நிர்வாகிகளுக்குள் போட்டி ஏற்பட்டது. முதலில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில், அடுத்ததாக முதலமைச்சர் பதவி மேல் குறி வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவை கைப்பற்றிய இபிஎஸ்
அடுத்த சில நாட்களில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும், கட்சியை டிடிவி தினகரனிடமும் ஒப்படைத்து சென்றார். ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட நிலையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் கட்சியையும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் வழிநடத்தினர். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அதிமுகவின் இரட்டை தலைமையை மாற்ற காய் நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி,
ஓபிஎஸ்யை கைவிட்ட திமுக
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அப்போது அவருக்கு உறுதுணையாக எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் இருந்தனர். இவர்களுடைய பேச்சை நம்பி தான் அடுத்தகட்ட போராட்டங்களை தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரம் பாஜகவின் உதவியோடு எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாம் எனவும் திட்டமிட்டார். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தை கைவிட்ட பாஜக, எடப்பாடி பழனிச்சாமியை அரவணைத்துக்கொண்டது. இதனால் வேறு வழியில்லாமல் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
தனி ஆளாக ஓபிஎஸ்
ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக இருந்த எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் அடுத்தடுத்து கட்சி மாறினார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். இதனையடுத்து கடைசி நம்பிக்கையாக இருந்த வைத்திலிங்கமும் இன்று திமுகவில் இணைந்துள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வம் மட்டும் தனி ஆளாக அம்போ என நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.





















