Serial Actress Akila : 'குறை கண்டுபிடிக்க முடியாத மனிதர் அவர்' : நெட்டிசன்களுக்கு புத்திமதி சொன்ன நடிகை அகிலா - நடந்தது என்ன?
திருமாவளவனுடன் தான் மேடையில் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து நடிகை அகிலா அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமாக பொறுப்பு வகிப்பவர் திருமாவளவன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை நடிகை அகிலா தொகுத்து வழங்கினார்.
திருமாவளவன் - நடிகை அகிலா:
வி.சி.க. தலைவர் திருமாவளவன் அந்த மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மேடையில் அகிலா பேசிக் கொண்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சீரியல் நடிகை அகிலா வி.சி.க.வில் இணைந்துள்ளாரா? என்று சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர் திருமாவளவனையும், நடிகை அகிலாவையும் அவதூறாக சித்தரித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அகிலா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது“ உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் நான் சிறப்பு விருந்தினர் மற்றும் தொகுப்பாளராக சென்றிருந்தேன். அந்த மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக வந்து தனது கரங்களால் திறந்து வைத்தவர் தோழர் அண்ணன் திருமாவளவன்.
மாமனிதர்:
அந்த வீடியோ ட்ரெண்டானதில், அவரை நான் ஒரு வரவேற்புரை அளித்து பேச அழைத்தேன். சிறப்பு விருந்தினர் அமர்ந்திருக்க வேண்டும். நான் அழைத்த பிறகு அவர் வர வேண்டும் என்பது நெறிமுறை. ஆனால், கட்சி நபர்கள் அவருக்கு மாலை அணிவிப்பது, நடுவே அழைப்பு என அவசரம், அவசரமாக இருந்தது. அதனால் அவரை பேச அழைக்க வேண்டும். அதற்காக அவரை அப்படியே கூப்பிட முடியாது. அவர் ஒரு பெரிய தலைவர். முக்கியமாக மனித உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமதர்மத்திற்காகவும் இப்போது போராடும் மாமனிதர். தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ளார்.
அவரை நான் திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று கூறினால் நன்றாக இருக்காது என்பதால், அழகான உரையை தயார் செய்து நான் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் நான் என்ன பேசுகிறேன் என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தார். அதை வேறு விதமாக ட்ரோல் செய்து அவரை களங்கப்படுத்தும் விதத்தில் நிறைய ட்ரோல் செய்வதை பார்க்கும்போது மனசு கஷ்டமாக இருந்தது.
வக்கிரபுத்தி:
இந்த மாதிரி விஷயங்களை பரப்புவதற்கு பதிலாக அவர் சொல்லும் நல்ல விஷயங்களை, இவர் மட்டுமின்றி எந்த பிரபலமாக இருந்தாலும் நல்ல விஷயங்களை பரப்பலாமே. தேவையில்லாமல் இதுபோன்று செய்யத் தேவையில்லை. இந்த சில நொடிகள் வீடியோவை பார்த்தவர்கள் என் உடை கலரை வைத்து நான் வி.சி.க.வில் சேர்ந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எல்லாம் கிடையாது. அந்த நிகழ்ச்சியில்தான் நாங்கள் மேடையில் சந்தித்துக் கொண்டோம்.
மற்றபடி நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, அரசியலில் நான் இப்போது வரை இல்லை. நிகழ்ச்சிகளில் வரும்போது நீங்கள் ஒரு ஆணை அசிங்கப்படுத்தும்போது, அவனுடன் இருக்கும் பெண்ணின் மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக செயலை செய்கிறீர்கள் என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் அந்த மனிதநேயம், அந்த பெண்ணையும் நீங்கள் அசிங்கப்படுத்துறீங்க என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்குள் இருக்கும் வக்கிரபுத்தி வெளிப்படுகிறது. நீங்கள் யார் என்று தெரிகிறது.
குறை கண்டுபிடிக்க முடியாத நபர்:
"மற்றவர்களிடம் எந்த குறை இருந்தாலும், நல்ல விஷயம் இருந்தால் அதை விட்ரனும். தேடி எடுத்தாலும் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத ஒரு மனிதர் மேல கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாத ஒரு மனிதர் மீது நீங்கள் குணாதிசய தாக்குதல் நடத்துவது மேடையில் இருக்கும் பெண்களையும் களங்கப்படுத்துவது ஆகும்.
நீங்கள் களங்கப்படுத்துவது யாரோ ஒரு வீட்டு பெண் மட்டும் கிடையாது. உங்கள் வீட்டு பெண்ணும் இருக்கிறார்கள். எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். உண்மையை உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு கடத்த பாருங்கள். இதுக்கு பிறகு இப்படி செய்யமாட்டீங்க என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் பேசினார். நடிகை அகிலா ஏராளமான படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.