வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லாமல் கட்சியை அன்புமணியிடம் கொடுத்தேன் என ராமதாஸ் சொன்னதாக சீமான் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேறு வழியில்லாமல் கட்சியை அன்புமணியிடம் கொடுத்தேன் என ராமதாஸ் சொன்னதாக சீமான் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ராமதாஸ் - அன்புமணி கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் “இதில் கருத்து சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. நான் ஐயாவின் பக்கத்தில் இருந்து பார்த்தவன். ஒரு பாதையை நோக்கி செல்லும்போது இதுபோன்ற கருத்து மோதல் வரத்தான் செய்யும். அது சரியாகிவிடும். என் நெற்றியில் ஜாதி பெயர் ஏதாவது எழுதி இருக்கிறதா என கேட்டவர்தான் ராமதாஸ். அவர் வரும்போது தெளிவாகத்தான் வந்தார். கால சூழ்நிலை அவர் அதுபோன்று தள்ளப்பட்டுவிட்டார்.
’கட்சியை பல பேரிடம் கொடுத்துப்பார்த்தேன். ஒன்னும் சரிபட்டு வரல. பின்னர்தான் வேறு வழியில்லாமல் அன்புமணியிடம் கொடுத்தேன்’ என ராமதாஸ் என்னிடம் சொல்லியுள்ளார். அதை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. வேறு ஒருவரிடம் கட்சியை கொடுக்க முடியாத சூழல் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. ஆனால் அவருக்கு நம்பகமான ஒரு ஆளாக பார்த்திருக்கலாம். இன்று திராவிட கழகத்தில் இருப்பவர்கள் அன்று ஐயாவுடன் இருந்திருக்கிறார்கள். இதனால் அவருக்கு நம்பகமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் இல்லையா?
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஒரு தலைவர் உருவாகட்டும். பின்னர் மற்றதை பேசிக்கொள்ளலாம். இங்கு தலைவரே உருவாகவில்லை. தலைவர் என்று நாங்கள் சொல்லும் அர்த்தம் வேறு. நீங்கள் சொல்வது வேறு. பெயர் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம். ஒரு படம் நடித்தவுடன் தலைவர் என்று போட்டுக்கொள்ளலாம். நாடாள வந்த மகராசா என்று வைத்துக்கொள்ளலாம். தலைவர் ஆவதற்கு நிறைய தகுதிகள் இருக்கு. பசி மறக்கணும், தூக்கம் தொலைக்கணும், ஏச்சு பேச்சுக்களை வாங்கணும். என் மேல் 140 வழக்குகள் பக்கமாக இருக்கிறது. எனக்கு முன்னாடி அண்ணன் நக்கீரன் கோபால் இருக்கிறார். அவருக்கும் எனக்கும்தான் போட்டி. அவர் 200ஐ நெருங்கியிருப்பார். தன்னை தாழ்த்திக்கொள்ள தயாராக இல்லாதவன் தலைவராக இருக்க தகுதியற்றவன். எதனொன்றையும் இழக்க முடியாதவன் பிறிதொன்றை அடைய முடியாது. தலைவன் என்பவன் தன்னையே எரித்துக்கொண்டு உலகிற்கு வெளிச்சத்தை தரும் மெழுகுவர்த்தி போன்று இருக்க வேண்டும். சும்மா பெயரில் போட்டுக்கொண்டு தலைவர் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.