‛ஹீரோவா நடிச்சது போதும்... காமெடிக்கு வா...’ சந்தானத்தை அழைத்த ஜீவாவின் ஸ்பெஷல் பேட்டி!
சந்தானத்தை மீண்டும் துணை நடிகராக பார்க்க காத்துக் கொண்டிருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
நடிகர் ஜீவா மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. காமெடி கலாட்டாவாக வெளியான இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் பெரிதளவில் வரவேற்பை பெற்றன. படத்தில் ஜீவா -சந்தானம் கூட்டணி காமெடியில் கலக்கியது. இருவரும் காமெடியில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் யூட்யூப் சேனல் ஓன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ஜீவா, “நான் தி நகர் என்றால் சந்தானம் பல்லாவரம் தான். சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் எனக்கும் அவருக்கு இயற்கையாகவே நல்ல பொருத்தம் இருந்தது. படத்தில் வருகிற டீ கடை காட்சிகளில் எல்லாம் இயல்பாகவே நாங்கள் நடித்தோம்.
சந்தானம் தற்போது அதிகமான திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க விரும்புகிறார். ஆனால் ரசிகர்கள் அவரை முன்பு கண்டது போல் துணை நடிகராக பார்க்க விரும்புகின்றனர். திரைக் கதைக்கு தனி ஹீரோ தான் பொருத்தம் என்று இருந்தால் நடித்துக் கொள்ளலாம். ஆனால் சந்தானம் தற்போது அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே நடிக்கிறார். அவரை நான் மீண்டும் துணை நடிகராக காண காத்திருக்கிறேன். நானும் கூட துணை நடிகராக தற்போது நடித்து வருகிறேன். ஹீரோவுக்கான கதைக்கு எனக்கு பிடித்திருந்தால் நான் ஹீரோவாக நடிப்பேன். நான் முதலில் சினிமாவுக்கு வரும்போது பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பெரிய தயாரிப்பளாரின் மகன், இலகுவாக பெரிய நடிகராகிவிட்டார் என்று சொல்லி விடுவார்கள். எனக்கு சினிமா பிடிக்கும் அதனால்தான் இன்றுவரை நல்ல கதைகளில் துணை நடிகராகவும் நடிக்கிறேன். துணை நடிகராக இருந்தால் சூட்டிங் ஸ்பாட்டில் நமக்கு முக்கியத்துவம் கிடைக்காது, அது எனக்கு பிடித்தமான ஒன்று. தனி ஹீரோவாக நடித்தால் முழு பொறுப்பும், ரசிகர்களில் எதிர்ப்பார்ப்புகளையும் தோள் மேல் சுமக்க வேண்டிருக்கும். ஆனால் துணை நடிகராக இருந்தால் கலகலப்பு இருக்கும்” என்றார்.
இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ’83’. இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜீவா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று பகிர்ந்துக் கொண்டார்.