Remdesivir Black Market | மதுரையில் கள்ளசந்தையில் ரெம்டெசிவர் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!
மதுரையில் கள்ளசந்தையில் ரெம்டெசிவர் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. உயிரிழந்த நபர்களின் மருத்துவச் சான்றிதழ்களை பயன்படுத்தி மருந்துகள் வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது
கொரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் பணிகள் கடந்த 8-ஆம் தேதி சனிக்கிழமை முதல் துவங்கின. அன்றைய தினம் ரெம்டெசிவிர் மருந்து வழங்குவது அதிகளவில் தெரியவில்லை என்பதால் கூட்டம் இல்லாமல் இருந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் மருந்து கிடைப்பது தெரிந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிக அளவு குவிந்தது. ஆனால் ஞாயிறு விடுமுறை என்பதால் யாருக்கும் மருந்து கிடைக்கவில்லை. தொடந்து திங்கள், செவ்வாய் என நாள் தோறும் கூட்டம் குவிய ஆரம்பித்தது. மதுரை மட்டுமில்லாமல் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை என பல்வேறு பகுதியில் இருந்து மதுரையில் மருந்துவாங்க குவிந்தனர். நாள் ஒன்றுக்கு சுமார் 80 நபர்களுக்கு மட்டும் டோக்கன்படி மருந்து வழங்கப்பட்டது. மற்றவர்கள் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். ரெம்டெசிவர் மருந்தை பெறும் நோயாளிகளின் நேரடி உறவினர்கள் மூலம் நோய் தொற்றுபரவும் அபாயம் இருக்கும் என்று அச்சம் வெளிப்பட்டதால் இன்று சமூக இடைவெளிகள் கடைபிடிக்கப்பட்டன.
தினமும் காலை 10 மணிக்கு மருந்து வழங்கப்பட்ட நிலையில் இன்று 10:40-க்கு தான் மருந்து வழங்கும் பணி துவங்கியது. 1 மணிவரை மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை வரை ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் எனவும், அடுத்தவாரம் திங்கள் அன்று மதுரைக்கு வரும் மருந்துகளை பொறுத்துதான் எத்தனை டோக்கன் கொடுக்கப்படும், ஒரு நாளைக்கு எத்தனை நபருக்கு மருந்து வழங்கப்படும் என தெரியவரும்.
ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மதுரையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மதுரை புது விளாங்குடியை சேர்ந்த இர்பான் கான் என்ற இளைஞர் சிக்கினார். இதனை தொடர்ந்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர். இந்த மருந்துகள் கள்ளச்சந்தையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்துகள் மதுரை அரசு மருத்துவகல்லூரியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதா என்பது குறித்து செல்லூர் போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், “ரெம்டெசிவர் மருந்தை பெற இளைஞர்களே அதிகளவு வருகின்றர். வெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டிய சூழல் உள்ளதால் குறைந்த அளவு பெண்கள் மற்றும் முதியவர்கள் மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வாங்க வருகின்றனர். மதுரை மருத்துமனைக்கு மதுரையை சுற்றியுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் ரெம்டெசிவர் மருந்து வழங்க வேண்டும். இல்லை என்றால் வெளியூரில் இருந்து அதிக நபர்கள் வந்து நோய்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்படி அந்ததந்த பகுதிக்கு பிரித்து வழங்கினால் மட்டுமே இதுபோன்ற சிக்கலை தீர்க்க முடியும். இப்படி கஷ்டப்படும் சூழலில் ரெம்டெசிவர் தவறான வழியிலும் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் மருத்துவசான்றிதழ்களை பெற்று அதனை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்தைபெற்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதன் மூலம் அதிக பணம் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து இவ்வாறு செய்துவருகின்றனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்துகள் மதுரை அரசு மருத்துவகல்லூரியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தவேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் “ என்றனர்.