அதிகாரத்தைக் கையில் எடுங்கள்! பெண்களுக்கு தரமான அட்வைஸ் கொடுத்த சௌமியா அன்புமணி!
"காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் சௌமியா அன்புமணியின் மகளிர் உரிமை மீட்பு பயணம் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது."

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே, பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தலைமையில் 'சிங்க பெண்ணே எழுந்துவா' என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சௌமியா அன்புமணியை வரவேற்கும் விதமாக, பாமகவினர் 50 அடி உயர பிரம்மாண்ட ரோஜாப் பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
உலகப் புகழ்பெற்ற உத்திரமேரூர்
கூட்டத்தில் உரையாற்றிய சௌமியா அன்புமணி, உத்திரமேரூர் மண்ணின் வரலாற்றுச் சிறப்புகளைப் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தப்பு செய்யாதவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் ஜனநாயக முறையான குடவோலை முறை குறித்து விளக்கிய அவர், பிரதமர் மோடியே போற்றும் அளவிற்கு உலகப் புகழ்பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்லும் நல்லாட்சி முறையைத் தமிழ்நாடு மீண்டும் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல் வரும்போது மட்டும் நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்கள், ஐந்து ஆண்டுகள் வரை மக்களை எட்டிப் பார்ப்பதில்லை என்று சாடினார்.
டாஸ்மார்க் கடைகள் பெருகிவிட்டது
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட உத்திரமேரூர் பகுதியில் ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதையும், போருக்குச் செல்லும் வீரர்களுக்கு அரிசி வழங்கிய வளம் மிக்க இந்த மண்ணில் இன்று நெல் சேமிப்புக் கிடங்குகள் கூட இல்லை என்பதையும் வேதனையுடன் குறிப்பிட்டார். மாறாக, இப்பகுதியில் சாராயத் தொழிற்சாலைகளும் டாஸ்மாக் கடைகளும் பெருகிக் கிடப்பதாகக் குற்றம் சாட்டினார். அரசு அலுவலகங்களும் காவல் நிலையங்களும் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் அவலநிலை இருக்கும்போது, பொன் விளையும் பூமியில் இளைஞர்களுக்குச் சாராயத்தைக் கொடுப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
போதிதர்மர் குறித்து பேசிய சௌமியா
பெண்களின் பாதுகாப்பு மற்றும் மதுவின் பாதிப்புகள் குறித்துப் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆண்டிற்குச் சுமார் 1,980 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடப்பதாகவும், பெண்களின் சேமிப்புப் பணம் அனைத்தும் டாஸ்மாக் கடைக்கே செல்வதாகவும் தெரிவித்தார். அரசு கொடுக்கும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை மீண்டும் மதுக்கடைகளுக்கே சென்று சேருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் ஆண்டுக்கு 7,000 என அதிகரித்திருப்பது கவலையளிப்பதாகக் கூறினார். சீனா போன்ற நாடுகளுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்த போதிதர்மர் பிறந்த இந்த வீர மண்ணில், இன்று பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு தரமான அட்வைஸ்
இறுதியாக, பெண்களின் வலிமையைப் பற்றி விளக்குகையில் ராமாயணத்தில் அனுமனின் பலத்தை அவனுக்குச் சீதை உணர்த்திய கதையை உதாரணமாகக் கூறினார். பெண்களுக்குத் தங்களின் அதிகாரம் இன்னும் புரியவில்லை என்றும், வரும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்கள் அந்த அதிகாரத்தைக் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நூறு அல்லது ஐந்நூறு வாக்குகள் பெற்றால் வார்டு மெம்பர் முதல் மாவட்ட சேர்மன் வரை பெண்களாகிய நீங்களே பதவிக்கு வர முடியும் என்றும், பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைக்க மாட்டார்கள் என்றும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நீங்களே நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.























