’செத்துட்டு இருக்காங்க சண்டே லீவா?’ - கதறும் தமிழகம்
ஆயிரம் பேர் நிற்கும் வரிசையில் நாளொன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தரப்படுகிறது. யார் மருந்துகிடைத்தது யாருக்குக் கிடைக்கவில்லை என்கிற விவரத்தையெல்லாம் வரிசையில் நிற்கும் மக்களே குறித்துக்கொள்கிறார்கள்.
’அண்ணனுக்காக நிற்கிறோம்’, ‘புருஷனக் காப்பாத்த நிற்கிறேன்’ எனக் கொரோனாவுடன் போராடும் உயிர்களைக் காப்பாற்றக் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறார்கள் மக்கள். முதல்நாள் இரவு 11 மணியிலிருந்து நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னார் ஒருவர். இன்னொரு பெண்மணி விடியற்காலை மூன்று மணிக்கு வரிசையில் நிற்கத் தொடங்கியிருக்கிறார்.
இவை நடப்பது அத்தனையுமே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில். ரெம்டெசிவிர் மருந்து வாங்க வாரக்கணக்கில் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆயிரம் பேர் நிற்கும் வரிசையில் நாளொன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே மருந்து தரப்படுகிறது. யார் மருந்துகிடைத்தது யாருக்குக் கிடைக்கவில்லை என்கிற விவரத்தையெல்லாம் வரிசையில் நிற்கும் மக்களே குறித்துக்கொள்கிறார்கள். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவர் கையிலும் ஒரு டெஸ்ட் ரிப்போர்ட்.ஒவ்வொரு டெஸ்ட் ரிப்போர்ட்டிலும் ’தீவிரத் தொற்று’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது எத்தனை தீவிரமாக இருந்தாலும் மருந்து கொடுப்பவர்களிடம் இருக்கும் ஒரே பதில் ‘ஒருவாரம் கழிச்சு வாங்க’ என்பதுதான்.
‘ஒருவாரம் கழிச்சு நாங்க வருவோம்.அதுவரைக்கும் அந்த உசுரு தாங்குமா? இதுல ஞாயிறு விடுமுறை வேற போட்டிருக்காங்க சார்’ என அங்கலாய்க்கிறார் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெள்ளைத்தாடி வைத்த நபர்.
’இவர்களை 200 பேராக வரிசையில் நிற்கவைப்பது மட்டும்தான் எங்கள் வேலை. மற்றதை மருந்துகொடுப்பவர்களும் மக்களுமே பார்த்துக்கொள்வார்கள்.இதில் நாங்கள் செய்வதற்கு வேறொன்றும் இல்லை’ எனத் தள்ளி நிற்கிறது அங்கே மருத்துவமனை வாசலில் முகாமிட்டிருக்கும் காவல்துறை. எல்லோரும் கைவிரித்த நிலையில் ஏதாவது விடிவு கிடைக்காதா என்கிற ஏக்கம் அங்கே நிற்கும் அத்தனைக் கண்களிலும்.
விடியலை நோக்கிக் காத்திருப்பவர்களுக்கு ரெம்டெசிவிர்தான் தற்காலிக விமோச்சனம். அதைக்கேட்டு இரைஞ்சும் குரல்களுக்குச் செவிமடுக்குமா அரசு?