’செத்த பெறவு மருந்து கிடைச்சா யாருக்கு உதவும்?’ - கோவை ரெம்டெசிவிர் நிலவரம்..!
’ப்ளீஸ் ஹெல்ப் மீ!’ எனக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வாசலில் ரெம்டெசிவிர் கேட்டுக் கதறிக் கொண்டு நிற்கிறார் அந்தப் பெண். அவரது அம்மா அப்பா இருவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் கே.ஜி.மருத்துவமனையிலும் இன்னொருவர் திருப்பூர் ரேவதி மெடிக்கல் செண்டரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளின் வாசலில் ரெம்டெசிவிர் மருந்துக்காகக் கையேந்தி நிற்கிறார்கள் பொதுமக்கள். வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர், ஒருவாரமாக வரிசையில் நிற்பவர், அடுத்த வேளையே தனது உறவினருக்கு ரெம்டெசிவிர் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவர் என வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு கண்ணீர்கதை. இதற்கெல்லாம் பதிலாக ஃபார்மா பாய்ண்டுகள் ‘இன்று போய் நாளை வா’ எனக் கைவிரிக்கின்றன.இப்படிக் கோவை அரசு மருத்துவமனை வாசலில் ரெம்டெஸ்விருக்காகக் காத்துக்கிடந்த மக்களின் வேதனைப் பதிவுகள்
’ப்ளீஸ் ஹெல்ப் மீ!’ எனக் கோவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி வாசலில் கண்கலங்கக் கதறிக் கொண்டு நிற்கிறார் அந்தப் பெண்மணி. அவரது அம்மா அப்பா இருவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் கே.ஜி.மருத்துவமனையிலும் இன்னொருவர் திருப்பூர் ரேவதி மெடிக்கல் செண்டரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘அம்மாவின் ஆக்ஸிஜன் அளவு கம்மியா இருக்கு. இன்னையிலேர்ந்து ரெம்டெசிவிர் கொடுத்தே ஆகனும்னு சொல்லியிருக்காங்க. என்ன செய்யுறதுனு தெரியலை’ எனச் சொல்லி அழுகிறார்.
பொங்கலூரிலிருந்து வந்த அங்கன்வாடி ஊழியர் ஒருவர், “என் மருமகனுக்கு 70 சதவிகிதம் பாதிப்புங்க. நிலைமை கவலைக்கிடமா இருக்கு. மாத்திரைக்காக ஆஸ்பத்திரியிலிருந்து லெட்டரோட வந்து காத்துக்கெடக்கோம். ஆனா டோக்கனும் தரமாட்டேங்கறாங்க. ஆஸ்பத்திரி உள்ளேயும் விடமாட்டேங்கறாங்க’ எனச் செய்வதறியாது நிற்கிறார்.
‘திருப்பூர்லேர்ந்து வரேன். மூணு நாட்களா ஆஸ்பத்திரி வாசல்லயே நிக்குறேன். எனக்கு ஒரு தீர்வும் இல்லை. இவங்க கேட்குற எல்லா டாக்குமெண்ட்டும் என்னிடம் இருக்கு. ஆனாலும் ரெம்டெசிவிருக்கு டோக்கன் கூடத் தரதில்லை. எங்க டாக்டருக்கு போன் போட்டுக் கேட்டா தனக்கு ஒன்னும் தெரியாதுனு கைவிரிக்குறாரு. செத்த பொறவு மருந்து கிடைச்சா யாருக்குங்க உதவும்?’ என்கிறார் மற்றொரு இளைஞர்.
‘ஆறு நாளுக்கு முன்னையே டோக்கன் வாங்கியும் எனக்கு இன்னும் மருந்து கிடைக்கலை.இனி ஒரு வாரத்துக்கு மருந்தும் கிடையாது. டோக்கனும் கிடையாது.17ந் தேதிக்கு மேலதான் டோக்கனே தருவாங்களாம். அண்ணனும் அண்ணியும் ஆழியார்ல தனியார் மருத்துவமனையில கெடக்காங்க.ஒரு நாள் செலவு மட்டும் 19,500 ரூபாயாவுது. பணம் போனாக் கூடக் கட்டிரலாம்ங்க.உசுரு போனா யாரு தருவாங்க?’ என்கிறார் நாற்பது வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர். சொல்லிமுடிக்கையில் அவர் கண்களில் நீர் தளும்பி நிற்கிறது.