பாலியல் சர்ச்சை: பொய் புகாரை நிரூபித்த கணித ஆசிரியருக்கு ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்பு
தலைமையாசிரியர் தூண்டுதலின் பேரில் பள்ளியில் பயின்ற மாணவர்களை வலுக்கட்டாயப்படுத்தி பொய் புகார் வாங்க பட்டிருப்பதாக மாவட்ட பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கரூரில் அறிவியல் பாடத்தில் உள்ள வளர் இளம் பருவம் என்ற பிரிவை நடத்திய போது கொச்சையான ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து நேற்று அந்த ஆசிரியர் பள்ளிக்கு திரும்பினார்.
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் பாகநத்தம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியர் பன்னீர்செல்வம் (46). இவர் கடந்த மாதம் 8 ம் வகுப்பு அறிவியல் பிரிவில், வளர் இளம் பருவம் என்ற பாடத்தை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் நடத்தியுள்ளார்.
அப்போது, மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடம் நடத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து மாணவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த புகார் அடிப்படையில், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் மற்றும் தாந்தோன்றி வட்டார கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் பள்ளியில் நேரடியாக சென்று பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, மாணவர்களிடம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்காக சில பாடங்களை தவிர்த்துவிட்டு வகுப்பறையில் பாடம் நடத்தியது தெரியவந்தது. மேலும், மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான கேள்விகளை தேர்வாக வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்பித்தனர். விசாரணைக்குழு அளித்த அறிக்கையின்படி மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை கடந்த 2 ம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியர் பன்னீர் செல்வத்துக்கும் இடையையான பிரச்னையில் ஆசிரியர் பன்னீர் செல்வம் பழிவாங்கப்பட்டதாக ஆசிரியர் சங்கங்கள் கூறிவந்தன.
ஊர் பொதுமக்களும், ஆசிரியர் பன்னீர் செல்வம் நல்லவர் என்றும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப் பூர்வமாக மனு அளித்தனர். இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து,இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியை, புகார் அளித்த மாணவர், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் அடிப்படையில், நேற்று முன் தினம் ஆசிரியர் பன்னீர் செல்வத்தின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பன்னீர் செல்வம் நேற்று ஆசிரியர் சங்க நிர்வாகிளுடன் பள்ளிக்கு சென்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஊர் பொதுமக்கள் பலரும் ஆசிரியரை வரவேற்றனர்.
மறு விசாரணையில், ஆசிரியர் மீது தவறு இல்லை எனத் தெரியவந்தது. ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவர், தனது பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் தலைமையாசிரியை வற்புறுத்தியதின் அடிப்படையில், ஆசிரியர் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.