ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் சீமான் பேசுகையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பெருமை என புகழாரம் சூட்டினார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ரஜினிகாந்தை சந்தித்தது ஏன் என்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திடீரென சந்தித்து பேசினார். ரஜினி கட்சி தொடங்குவேன் என சொன்னதும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த சீமான், இப்போது அவருடன் இணக்கமாக செல்வதை பார்க்க முடிகிறது.
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் சீமான் பேசுகையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பெருமை என புகழாரம் சூட்டினார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சந்திப்புக்கு பின் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த சீமான், “நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் படப்பிடிப்பில் அவரும் கட்சி கூட்டத்தில் நானும் பிஸியாக இருந்தோம். அதனால் அந்த சந்திப்பு தாமதமானது. அன்பு மரியாதை நிமித்தமாகவே ரஜினிகாந்தை சந்தித்தேன்.
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன். அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாது. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான். அதைத்தான் நான் தவறாக உள்ளது என்கிறேன். அரசியல் என்பது மிக கொடூரமான ஆட்டம் என்று ரஜினிகாந்த் மற்றும் கமலிடம் ஏற்கெனவே கூறியுள்ளேன். அரசியல் உங்களுக்கு சரிவராது. ஏச்சு பேச்சுக்களை தாங்க வேண்டும் என்று ரஜினியிடம் கூறினேன். திரைத்துறை குறித்தும் பேசினேன். ரஜினியை சந்தித்தது அரசியலுக்காக தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.
சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்பதா? அப்படியென்றால் சங்கி என்பதில் பெருமைதான். எங்களை எல்லாம் சங்கி என்று சொல்பவர்கள்தான் சங்கி. தற்போது உள்ள தலைவர்கள் உருவாக்கப்பட்டவர்கள், உருவானவர்கள் இல்லை. உருவாக்கப்பட்டவர்களுக்கு கவலை, பசி, கண்ணீர் தெரியாது. தற்போது சிலர் அரசியல் தலைவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் காமராஜர், அண்ணா அப்படி இல்லை” எனத் தெரிவித்தார்.