TN MLA's: கலைவாணர் அரங்கில் முதல் கூட்டத் தொடர்; பதவியேற்றுக்கொண்ட புதிய எம்.எல்.ஏ.க்கள்!
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்
சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். வெற்றிச்சான்றிதழ்களுடன் வந்த அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அனைவருக்கும் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வழக்கமாக புதிய எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்தில் தான் உறுதிமொழி ஏற்பார்கள். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு இந்த கூட்டத்தொடர் நடைபெற்றது. கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுகிறது. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள்.