Madurai Train Fire: மதுரையில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பயணிகள் ரயில்.. 9 பேர் பலி
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சிலிண்டர் வைத்து சமையல் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. லக்னோவில் இருந்து 15 நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக கடந்த 17ம் தேதி இந்த ரயில் புறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் வந்திருந்த ரயில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள பல்வேறு புன்னியஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிறுத்தி வைக்கபட்டு இருந்த ரயிலில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த அனவருமே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பார்ட்டி கோச் என்ற ரயில்வே திட்டத்தின் அடிப்படையில், ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து ஆன்மீக சுற்றுலாவை தொடங்கியுள்ளனர். கடந்த 17ம் தேதி இவர்களின் பயணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக 90 பேர் கொண்ட அந்த குழு மதுரை வந்தடைந்துள்ளது. அங்கு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த பெட்டியில் இருந்தவர்கள், வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதோடு, அதிவேகமாக பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது. இதைகண்ட உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளனர். இதனிடையே பெட்டி முழுவதும் திப்பற்றி எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
9 பேர் பலி:
இதனிடையே, ரயில்வே பாதுகாப்பு படையினர், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் 5 ஆன்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் யார் என அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் சிதிலமடைந்துள்ளது. காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதோடு, விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த பெட்டியில் பயணித்த பிற பயணிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.