Kavin Murder: கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை
சென்னையில் ஐடி என்ஜினியராக பணியாற்றி வந்த கவின், காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சவரணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த கவின் என்பவர், சென்னையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 27-ம் தேதி, காதல் விவகாரம் தொடர்பாக சுர்ஜித் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்யுமாறு வலியுறுத்திய கவினின் உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று இரவு சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கவினின் உறவினர்கள்
கவின் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அக்காவும், கவினும் பழகி வந்ததாகவும், அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழகுவதை நிறுத்துமாறு கவினிடம் கூறியதாகவும், ஆனால் அதை அவர் கேட்காததால் வெட்டிக் கொலை செய்ததாக அவர் கூறினார்.
இந்த ஆணவக் கொலை விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்ய அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதுவரை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வந்தனர்.
அரசு சார்பில் கொடுக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் வாங்க மறுத்த அவர்கள், தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணனும், தாய் கிருஷ்ணகுமாரியும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், அவர்களை கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கிவினின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது
இந்த சூழலில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. பாரபட்சமின்றி வெளிப்படையாக விசாரணை நடப்பதை உறுதி செய்வதற்காக சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு டிஜிபி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், நேற்று இரவு நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இரவில் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, காவல் துணை ஆணையர் ரத்தினகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சரவணனிடம் விசாரணை நடததினர். பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொலை நடந்தது எப்படி.?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-தமிழ்செல்வி தம்பதி. இவர்களுடைய மகன் கவின்(27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகரில் வசித்து வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர்கள் சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், சுர்ஜித்(24) என்ற மகனும் உள்ளனர். இதில், சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்துள்ளனர்.
அப்போது, ஒரே பள்ளியில் படித்த கவினுக்கும், சுர்ஜித்தின் அக்காவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்பு முடித்து சென்னையில் ஐடி துறையில் என்ஜினியராக பணியாற்றி வந்த கவின், விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ளார். கடந்த 27-ம் தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் அழைத்து வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்து, கவினை பேசுவதற்காக அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார் சுர்ஜித். இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுர்ஜித்தை கைது செய்தனர்.





















