கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்
தனியார் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கால்நடை தீவன ஆலைகளை ஊக்குவிப்பது குறித்து கரூர் கலெக்டர் தகவல்.
தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் தொழின் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் தகுதியுடையவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது,
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை தொழில் முனைவோர்களை உருவாக்க ஒதுக்கீடு செய்துள்ளது. தனிப்பட்ட தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கால்நடை தீவன ஆலைகளை நிறுவ ஊக்குவிப்பதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும். பால் பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தரம் மற்றும் சுகாதாரமான பால் பதப்படுத்துதல் வசதிகள், பேக்கேஜ் வசதிகள் அல்லது பால் பதப்படுத்துதல் தொடர்பான பிற செயல்பாடுகளுடன் புதிய அலகுகளை நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள பால் பதப்படுத்துதல் அலகுகளை வலுப்படுத்துதல் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி வணிகர், தொழில் முனைவோர் பின்வரும் பால் பொருட்களின் மதிப்பு கூட்டுதலுக்காக புதிய யூனிட்டுகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள உற்பத்தி அலகுகளை வலுப்படுத்துவதற்கும் கடன் பெறலாம். ஐஸ்கிரீம் அலகு, சீஸ் உற்பத்தி அலகு டெட்ரா பேக்கேஜிங்" வசதிகளுடன் கூடிய அல்ட்ரா ஹைடெம்பரேச்சர் பால் பதப்படுத்தும் அலகு, சுவையூட்டப்பட்ட பால் உற்பத்தி அலகுகள், பால் பவுடர் உற்பத்தி அலகுகள், மோர் தூள் உற்பத்தி அலகுகள், வேறு ஏதேனும் பால் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டம் உற்பத்தி அலகுகள், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் வசதிகளின் மதிப்பு கூட்டல், புதிய இறைச்சி பதப்படுத்தும் பிரிவை நிறுவுவதற்கும், கிராமப்புற, அரை நகர்ப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, பன்றி, எருமை ஆகியவற்றின் இறைச்சி பதப்படுத்தும் வசதிகளை வலுப்படுத்துவதற்கும், தொழில் முனைவோர் இந்த திட்டத்தின் பலனைப் பெறலாம். பெரிய அளவிலான ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் அலகுகள், கால்நடை தீவன உற்பத்தி அலகுகள், கால்நடை தீவன உற்பத்தி மற்றும் வலுப்படுத்தும் அலகுகளை நிறுவுவதற்கான பலனை தொழில் முனைனோர் பெறலாம். சிறு, நடுத்தர மற்றும் பெரிய கால்நடை தீவன ஆலையை நிறுவுதல், மொத்த கலப்பு ரேஷன் தொகுதி அலகு, கனிம கலவை ஆலை, சைலேஜ் தயாரிக்கும் அலகு வலுப் படுத்தவும், கால்நடை தீவன பரிசோதனை ஆய்வகம் போன்ற இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்டலில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது. கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளான ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றின் கறைகளை பலப்படுத்தவும், பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு மேற்கொள்ளவும், வெள்ள தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதை உறுதி செய்வது, உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் ஜேசிபி, ரம்பம், பொக்லைன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ளவும், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய ஊழியர்களை வைத்துக் கொள்ளவும், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை முன்கூட்டியே தணிக்கை செய்து சரி செய்திடவும், வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்துவதுடன், மழை, வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறிக்கை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, உதவி மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, தனித்துணை கலெக்டர் சைபுதீன், பேரிடர் மேலாண்மை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.