கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 387 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 197 கன அடி தண்ணீர் வந்தது. காலை 10:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 507 கன அடியாக சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 387 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 3,653 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 3,550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 5,490 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.14 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.79 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.77 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றங்கரையோரம் தடுப்புச் சுவர் - தலைமை பொறியாளர் ஆய்வு
தவட்டுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கும் இடத்தை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரத்தில், வெள்ளநீர் புகாதபடி தடுப்புச் சுவர் அமைக்கும் இடத்தில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் 2.50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தபோது ஊருக்குள் எங்கே பாதித்தது? மேலும் 3 லட்சம் முதல் 4 லட்சம் கன அடி தண்ணீர் வந்தால் எதுவரை பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இங்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்புச்சுவர், 156 மீட்டர் நீளமுள்ள 5 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், திட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பின் பணியை தொடங்கப்பட உள்ளதாகவும், தெரிவித்தனர். தொடர்ந்து நஞ்சை புகலூர் காவிரி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டு வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், திருச்சி நடு காவேரி வடி நில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்ரமணி உடன் இருந்தார். விரைந்து காவிரி ஆற்றங்கரை ஏறும் தடுப்புச் சுவர் அமைக்குமாறு பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்