2 மாதமாக உதவித்தொகை வரல.. மருந்து வாங்க முடியாமல் முதியவர்கள் வேதனை
தமிழ்நாட்டில் 60 வயதான ஆண்கள் மற்றும் 58 வயதான பெண்களுக்கு முதியோர் உதவி தொகையாக மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது.
கரூரில் கடந்த 2 மாதமாக உதவித்தொகை வராததால் சாப்பாட்டிற்கும், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் உதவித்தொகை பெறாமல் 50-க்கும் மேற்பட்டோர் அவதி அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 60 வயதான ஆண்கள் மற்றும் 58 வயதான பெண்களுக்கு முதியோர் உதவி தொகையாக மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை விதவையர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை முதியோர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள தோரணங்கள் பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ஒவ்வொரு மாதமும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். இந்த உதவி தொகைகளை வங்கி சார்பில் நியமிக்கப்பட்ட நபர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக தங்களுக்கு உதவித்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அப்பகுதி முதியோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதவித்தொகை பெற முடியாத காரணத்தால் சாப்பாட்டிற்கு உணவு பொருட்கள் வாங்க முடியவில்லை எனவும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் வாங்க முடியவில்லை என முதியவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஒரு சிலர் நேரடியாக சென்று உதவித்தொகைகள் வாங்குகின்றனர் ஆனால், எங்களைப் போன்ற பலர் நடக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் 2 மாதமாக உதவித்தொகை வாங்க முடியவில்லை என்றனர்.
இதுகுறித்து உதவித்தொகை வழங்கும் முத்துக்குமார் என்பவரிடம் விளக்கம் கேட்டபோது, முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்டவுடன் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று கொடுக்கப்பட்டு வருகிறது. ராயனூர் மட்டுமின்றி திருமாநிலையூர், தாந்தோணிமலை, ஆச்சிமங்கலம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரம் பேருக்கு படிப்படியாக உதவித்தொகைகள் கொண்டு வந்து சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், உதவித்தொகை வழங்கும்போது கைரேகை பதிவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.