CM Stalin: அனைத்து தரப்பினரும் கொண்டாடும் விழாவாக கருணாநிதி நூற்றாண்டு விழா இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழா:
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நூற்றாண்டு விழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். பல்கலைகழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், மக்கள் இணைந்து கொண்டாடுவதாக கலைஞர் நூற்றாண்டு விழா அமைய வேண்டும். ஆலோசனைகள் தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கருணாநிதியை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுபவையாக இந்த விழாக்கள் அமைய வேண்டும்.
மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம். பெரிய பெரிய விழாக்களாக மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்தையும் இதற்கு பயன்படுத்த வேண்டும்.
ALSO READ | Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!
அரசாணை:
செய்தி மக்கள் தொடர்புத் துறை இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைகழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும். அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நூற்றாண்டு விழா தலைமைக் குழு,விழாக் குழு, மலர்க்குழு,கண்காட்சிக்குழு போன்ற குழுக்கள் அமைச்சர்களை உள்ளடக்கி அமைக்கப்படும். இக்குழுக்கள் தங்களுக்குள் அடிக்கடி கூடிப் பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடக்கக் கூட்டம் தான்.தொடர்ந்து நாம் பேசுவோம்.இது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும்."
முன்னதாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாட திமுக சார்பில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கிட தலைமைக் கழகத்தின் சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.
ஆ. இராசா எம்.பி, கனிமொழி கருணாநிதி எம்.பி, திருச்சி சிவா எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர்.