OPS on Jallikattu: ஜல்லிக்கட்டு விவகாரம்; துரோகக் கூட்டம் சொந்தம் கொண்டாடுவதா?- திமுக அரசிடம் ஓபிஎஸ் கேள்வி
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுமாறும், ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்யுமாறும் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுமாறும், ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்யுமாறும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு என்பதெல்லாம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடியின் வீர விளையாட்டு என்பதை மறந்து, 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதித்த அரசு தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு என்பதையும், பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செயல்பட்டார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப் பிரிவு 22-ன்கீழ், புலிகள் கரடிகள் ஆகியவற்றுடன் காளைகளையும் சேர்த்து 11-07-2011 அன்று ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று தி.மு.க. அப்போதே அறிவித்து இருந்தால், ஜல்லிக்கட்டு என்கிற பிரச்சனையே வந்திருக்காது. இதனை தி.மு.க. செய்யாததுதான் ஜல்லிக்கட்டு தடைக்கு மூலக் காரணம்.
தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எதிராக தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் காரணமாக, சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு இல்லாமல் தமிழகம் களையிழந்து போனதையும், காளை மாடுகள் எல்லாம் இறைச்சிக்கு மட்டுமே இறையானதையும், சீமை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு புதுப்புது வியாதிகள் உருவானதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 07-01-2016 அன்று ஓர் அறிவிக்கையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு வழிவகை செய்தது. இந்த அறிவிக்கையை எதிர்த்து பல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தடை பெற்றுவிட்டன. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்று மக்கள் ஒருசேர குரல் கொடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமென்று நான் பிரதமரை வலியுறுத்தி வந்தேன். இதுகுறித்து, 19-01-2017 அன்று பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து விரிவாக விவாதித்தேன். அப்போது, மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டினை நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் மத்திய அரசின் சட்டத் துறை, சுற்றுச்சூழல் துறை, வனத் துறை என பல துறைகளின் அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து 21-01-2017 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டம், 23-01-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி
இந்தச் சட்டத்தினை எதிர்த்து சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கினை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அப்போதைய மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை எதிர்த்து போராட்டம் கூட நடத்த முடியாமல், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த தி.மு.க. இதற்கு சொந்தம் கொண்டாடுவதும், துரோகக் கூட்டம் உரிமை கொண்டாடுவதும் கேலிக்கூத்தாக உள்ளது. எது எப்படியோ, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவருக்கும் மன மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக, கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் ஆன்லைன் பதிவில் மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் விளையாட்டு வீரர்களும், காளை உரிமையாளர்களும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றித் தரவேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு.
வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுக
தமிழ்நாடு அரசின் 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறவும், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’
இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.