அரவக்குறிச்சியில் இளநிலை உதவியாளரை பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியர்..பரபரப்பான பள்ளி..!
அலுவலக நேரம் முடிந்த பிறகு பள்ளிக்குள் பணியாற்ற அனுமதி இல்லை என தலைமை ஆசிரியரும், வேலை முடித்த பிறகுதான் செல்வேன் என இளநிலை உதவியாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக நேரம் முடிந்த பிறகு பள்ளிக்குள் பணியாற்ற அனுமதி இல்லை என தலைமை ஆசிரியரும், வேலை முடித்த பிறகுதான் செல்வேன் என இளநிலை உதவியாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மகளிர் பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையாக இருந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலை 9 மணி மற்றும் மாலை 4.15 மணி வரை செயல்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் செல்வ கதிரவன் என்பவர் மாலை 4.15க்கு மேல் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது தலைமை ஆசிரியை உமா என்பவர் 4.15 மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது. அலுவலகத்தை பூட்டவேண்டும். வெளியே வாருங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கதிரவன் வேலை இருக்கிறது. 5.30 மணிவரை இருந்தாக வேண்டும். பள்ளியை பூட்ட வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைமை ஆசிரியை உமா, இளநிலை உதவியாளர் கதிரவனை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செல்வ கதிரவன் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி அவரை வர வைத்து பள்ளி கதவை திறந்து விட்டுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர் உமா கூறுகையில், ”பள்ளி மாலை 4:15 மணிக்கு முடிந்தாலும், அலுவலகத்தில் மாலை 5:45 மணி வரை தான் இருக்க வேண்டும். நான் பெண்ணாக இருக்கும் நிலையில் அதற்கு மேல் எப்படி அங்கு இருக்க முடியும். வெளியே வாருங்கள் நான் பூட்டி விட்டு செல்ல வேண்டும் என செல்வகதிரவனிடம் கூறினேன். அவர் வேலை உள்ளது என்று கூறியபடியே உள்ளே இருந்ததால் நான் வேற என்ன செய்ய முடியும். எனவே பூட்டி விட்டேன் பிறகு நானே வந்து திறந்து விட்டேன்” என்றார். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், இளநிலை உதவியாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்