மாரடைப்பு ஏற்படுவது எப்படி? ஏன்? விளக்குகிறார் மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியன்
மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்கிற சந்தேகம் பலருக்கு இன்றும் உள்ளது. நடிகர் விவேக் தற்போது மாரடைப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது தொடர்பான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே இருதய நோய் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவசுப்பிரமணியன் அது குறித்து விளக்குகிறார்.
ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு டாக்டர் சிவசுப்பிரமணியன் அளித்த பேட்டி:
மாரடைப்பு ஏற்படுவது எப்படி ? ஏன் ?
• மாரடைப்பு என்பது பலருக்கு எந்த முன்னறிப்பும் இன்றி திடீரென ஏற்படுவது. சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நடுத்தர வயதுடையோருக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது.
• 20 முதல் 25 சதவீதம் பேருக்கு எந்த வித காரணமும் இன்றி கூட மாரடைப்பு என்பது ஏற்படுகிறது.
• 30 முதல் 40 விழுக்காடு நபர்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் தோள்பட்டை வலி உள்ளிட்ட சில அறிகுறிகளை காட்டிவிட்டு மாரடைப்பு ஏற்படும்
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பு எந்த வகையானது ?
• விவேக்கிற்கு சர்க்கரைவியாதி, ரத்தகொதிப்பு போன்ற பிரச்னைகள் இருந்திருந்தால் 59 வயதில் இருக்கும் அவருக்கு மாரடைப்பு வந்திருப்பது என்பது இந்தியாவில் எல்லோருக்கும் வருவதை போன்றதுதான்.
• இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய் அடைப்பு ஏற்பட்டதும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்
• மருத்துவர்கள் சொல்லும்போது கூட இதயத்தின் இடதுபுற ரத்தக் குழாயில் அவருக்கு 100% அடைப்பு இருந்தது என சொன்னார்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதா ?
• கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என பொத்தம் பொதுவாக சொல்லிவிடமுடியாது
• தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவது என்பது உலகளவில் மிக மிக குறைவு
• உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் , ஒரு கோடி பேரில் 21 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
• அதனால் கொரோனா தடுப்பூசியால்தான் மாரடைப்பு ஏற்பட்டது என்று சொல்வது ஏற்க கூடியதாக இல்லை.
எக்மோ கருவி உதவியுடன் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது எக்மோ கருவியின் செயல்பாடு என்ன ?
• இதயத்திற்கும் நுரையீரலுக்கும் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய சிகிச்சையே எக்மோ சிகிச்சை
• இந்த எக்மோ கருவி சிகிச்சை என்பது கிட்டதட்ட இறுதிகட்ட சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம்
அதேபோல், விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
• ஆஞ்சியோகிராம் என்பது ஒரு டெஸ்ட் – இருதயத்திற்கும் போகும் ரத்த குழாயில் ஏதும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என கண்டுபிடிக்கும் சோதனை
• ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அறுவை சிகிச்சை முறை – ஆஞ்சியோகிராம் சோதனையில் அடைப்பு இருப்பதாக தெரியவந்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து அங்கு ஒரு ஸ்பிரிங் பொறுத்தி, ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுத்து விடும் சிகிச்சை முறை