DIG Suicide FIR: டிஐஜி விஜயகுமார், தன் அறைக்கு வந்தது முதல் - சுட்டுக்கொண்டது வரை.. தனிப்பாதுகாவலர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது தனிப்பட்ட காவலர் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது தனிப்பட்ட காவலர் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பாதுகாவலர் அளித்த வாக்குமூலம்:
கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் விஜயகுமாரின் தனிப்பாதுகாவலரான ரவிச்சந்திரன், சம்பவம் நடந்த தினத்தன்று காலை நடந்த நிகழ்வுகளின் விவரங்களை முழுமையாக தெரிவித்துள்ளார். அதன்படி “ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலரான ரவிச்சந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கோவை சரக டி.ஐ.ஜி.யின் தனிப்பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். பாதுகாப்பு அலுவலுக்காக அவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்ததது. டி.ஐ.ஜி. விஜயகுமார் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளார். நேற்று காலை 6.30 மணிக்கு தினசரி நிலை அறிக்கை எனப்படும் டி.எஸ்.ஆர். விவரங்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பால் வாங்கி குடித்து விட்டு, ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என டி.ஐ.ஜி. விஜயகுமார் கேட்டவாறே அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். அறைக்கு வெளியே திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ரவிச்சந்திரனும், முகாம் அலுவலக வாகன ஓட்டுநர் அன்பழகன் என்பவரும் ஓடி சென்று பார்த்த போது, தலையில் ரத்த காயத்துடன் டி.ஐ.ஜி. விஜயகுமார் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை” என ரவிச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டிஐஜி விஜயகுமார் மரணம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை
வழக்குப்பதிவு:
இதையடுத்து, டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை தொடர்பாக 174 சட்டப்பிரிவின் படி குற்றமாக வழக்குப்பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயகுமாரும் - காவல் பணியும்:
தேனி மாவட்டம் அணைக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றினார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.