டாக்டர் டூ ஐபிஎஸ்.. களமிறங்கினாலே அதிரடிதான்.. உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனின் மாஸ் கதை!
மத்திய அரசுப் பணியில் இருந்த செந்தில்வேலன் ஐபிஎஸ்-ஐ தமிழ்நாடு பணிக்கு அழைத்து உளவுத்துறை ஐஜியாக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
புதிய உளவுத்துறை ஐஜி:
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சாட்டையை சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரை இடம் மாற்றம் செய்தார். அடுத்ததாக இந்த கலவரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது உளவுத்துறை இந்த கலவரத்தை சரியாக கணிக்கத் தவறியது தான் என்று குற்றச்சாட்டு எழ, இந்த ஆண்டு ஜனவரி மாதம் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளை பணியிடமாற்றம் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உளவுத்துறையில் டிஐஜியாக இருந்தவருக்கு உளவுத்துறை ஐஜியாக பதவி உயர்வு கொடுத்தது தமிழ்நாடு அரசு. அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் பதவி உயர்வு பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆசியம்மாளுக்கு பதிலாக உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் செந்தில்வேலன் ஐபிஎஸ்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு:
2011ம் ஆண்டு நடைபெற்ற பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நினைவிருக்கும் யாராலும் செந்தில்வேலன் ஐபிஎஸ்-ஐ மறந்திருக்க முடியாது. இமானுவேல் சேகரனின் 54வது நினைவு நாள் நிகழ்ச்சி பரமக்குடியில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்றது. அந்த சமயத்தில் தான் கமுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் பழனிகுமார் படுகொலை செய்யப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்திருந்தது. இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தியபின், சிறுவனின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தரப்பு கூறியிருந்தது. ஜான் பாண்டியன் வந்து பேசினால் பதற்றம் அதிகரிக்கும், கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவரை தூத்துக்குடியிலேயே வைத்து கைது செய்தது காவல்துறை. ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி நடக்கும் பரமக்குடியில் பாதுகாப்பிற்காக டிஐஜி சந்தீப் மிட்டல் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட விவரம் தெரியவரவே பரமக்குடி 5 முனை சந்திப்பு சாலையில், இமானுவேலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களிடம் டிஐஜி சந்தீப் மிட்டல் மற்றும் சென்னை அடையாறு துணை கமிஷனராக இருந்த செந்தில்வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐபிஎஸ் ஆன வரலாறு:
அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலனுக்கு பரமக்குடியில் ஏன் பணி என்று கேட்கலாம். இருக்கிறது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் செந்தில்வேலன். அவரது அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர். அவரது அம்மா ஒரு ஆசிரியை. இவருக்கு மூன்று சகோதரிகள். கடைசிப் பையன் தான் செந்தில்வேலன். செந்தில் வேலனின் முப்பாட்டன் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் காவல்துறையில் இருந்தவர். செந்தில்வேலனின் தாத்தாவும் காவல்துறை தான். அதனாலேயே சிறுவயதில் இருந்தே காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்ற ஆசையுடனேயே வளர்ந்திருக்கிறார் செந்தில்வேலன். ஆனால் செந்தில் வேலனின் அப்பாவிற்கு தன் மகனை டாக்டராக பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் என்ன. ஒரு டாக்டரால் ஐபிஎஸ் ஆக முடியாதா என்று எண்ணியவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்திருக்கிறார். படித்து பட்டம் பெற்ற செந்தில்வேலன் அரசு மருத்துவராக மருத்துவம் பார்த்துக்கொண்டே ஓய்வு நேரத்தை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க ஒதுக்கியிருக்கிறார். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் படிப்பு படிப்பு என்று இருக்க ஒரே ஆண்டில் பாஸ் செய்துவிட்டார் செந்தில்வேலன். இந்திய அளவில் 86வது ரேங்க். ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பே இருந்தது. ஆனால், தான் விரும்பிய ஐபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்துக்கொண்டார். தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்தவருக்கு ரிவால்வரும் பதக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கவுரவமானது பயிற்சியில் இருக்கும் பேட்ச்சில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களில் ஒருவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. பயிற்சிபெற்ற 81 பேரில் சிறந்த மாணவராக செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கபப்ட்டிருக்கிறார். தமிழ்நாடு எலைட் பிரிவில் சேர்ந்தவர்களில் செந்தில்வேலனும் ஒருவர். அதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கே.ஏ.நாராயணன் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படையில் இருந்த வால்ட்டர் தேவாரம் ஆகியோருக்கு அடுத்து செந்தில்வேலன் தான் அந்த பட்டியலில் மூன்றாவது ஆள்.
ராமநாதபுரத்தில் முதல் பணி:
காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் பயிற்சி முடித்தவருக்கு முதல் பணி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு. மிகவும் சிக்கலான பகுதி அது. எந்த நேரமும் பதற்றத்திலேயே இருக்கும் பகுதி என்பதால் காவல்துறை உள்பட பல்வேறு துறைக்கு தலைவலியான பகுதியும் கூட. அங்கு திறமையாக பணியாற்றிய அவர் சிதம்பரம் ஏ.எஸ்.பியாக மாற்றப்பட்டார். அங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் பிரச்சனை, நடராஜர் கோயில் பிரச்சனை என்று அதையும் திறமையாகக் கையாண்டார். ராமநாதபுரம் எஸ்பியாக இருந்தவர், பின்னர் தஞ்சாவூர் எஸ்பி ஆனார். அங்கு நிலவியிருந்த ரவுடியிசம், திருட்டு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தினார். தூத்துக்குடி எஸ்பியாக இருந்த அவர் மீது சென்னையின் கண் பார்வை பட சென்னை அடையாறு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது தான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்திருந்தது. காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட முதல் பட்டியலிலேயே சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார். அந்த சமயத்தில் தான் இமானுவேல் சேகரன் பூஜை வருகிறது. கலவரம் ஏற்பட்டால் ஆட்சிக்குக் கெட்டபெயர் ஏற்படும் என்று எண்ணி, அந்த பகுதியில் ஏஎஸ்பியாகவும், எஸ்பியாகவும் ஏற்கனவே அனுபவம் இருந்த செந்தில்வேலனை பாதுகாப்புக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு.
நீதிபதி சம்பத் அறிக்கை:
போராட்டக்காரர்களிடம் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன் பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே ஒருவர் செந்தில்வேலனின் சட்டையைப் பிடிக்க, திடீரென கல்வீச்சு சம்பவங்கள் நிகழ, அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டு அந்த பகுதியே கலவரமாகியிருக்கிறது. கலவரம் கட்டுக்கடங்காமல் போக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேருக்கும் மேல் காயம் ஏற்பட்டது. அன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கலவரம் அடக்கப்படாமல் போயிருந்தால் அப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். அத்தகையதொரு சூழலில் காவல்துறையினர் நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது என்று நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை அளித்திருந்தது.
தமிழ்நாடு பணிக்கு மாற்றம்:
இவரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்பியாக இடமாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு. பின்னர், மத்திய அரசு அயல் பணிக்குச் சென்றுவிட்டார். 2018ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அங்கேயே பணியாற்றிவந்த இவருக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளித்து இந்திய தூதரக பணி பாங்காக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தது தமிழ்நாடு அரசு. ஆசியம்மாள் ஜஜியான அதே பட்டியலில் தான் செந்தில்வேலனும் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். அங்கும் இவர் உளவுப்பிரிவில்தான் பணியாற்றினார். மத்திய அரசுப் பணியில் இருந்த அவரை தமிழ்நாடு பணிக்கு வரவழைத்து தற்போது அவரை உளவுப்பிரிவு ஐஜியாக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
மக்களுக்கு எதிராக, சட்டத்துக்கு விரோதமாக உள்ள எல்லா விஷயங்களையும் முடக்க வேண்டும். நல்லவர்கள் மட்டும்தான் ரோட்டில் தைரியமாக நடமாட வேண்டும். அப்படி ஒரு சூழல் வரும் வரை எனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் செந்தில்வேலன். நல்லவர்கள் நடமாடுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு பொறுப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஏற்படுத்துவாரா? பார்ப்போம்.