பள்ளி நிர்வாகத்தினரின் சமுதாயத்தைக் கண்டறிந்து, புழுதி வாரி இறைக்கக்கூடாது - மைத்ரேயன், அதிமுக
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ஆசிரியர் ராஜகோபாலன். வணிகவியல் ஆசிரியரான இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது ஆதாரத்துடன் அம்பலமானது. முன்னாள் மாணவி ஒருவர் வெளியிட்ட அந்த புகாரின் அடிப்படையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும், அவரை போல மேலும் சிலர் பள்ளிியில் இருப்பதும் அவரது வாக்குமூலம் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பெண்களை போற்றி பாடும் இந்த நாட்டில் பெண்களை இழிவுபடுத்துவது, பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, மகளிரை அடக்கி ஆள்வது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த வகையில், சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவியர் சிலருக்கு ஆன்லைன் வகுப்பு என்ற போர்வையில் அந்த பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்தது கடும் கண்டனத்திற்குரியது. அந்த ஆசிரியர் மீத போக்சோ சட்டத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் அடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதே சமயத்தில், பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு அந்தப் பள்ளி ஓர் இனத்தைச் சார்ந்தவரால் நடத்தப்படுகிறது என்பதால், இந்துக்கள் நடத்தும் பள்ளி என்பதால் அந்த இனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இது கண்டனத்திற்குரியது. ஆசிரியர் அந்த பள்ளியின் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும்போது வாய்மூடி மவுனியாக இருக்கின்றனர். இந்த செய்திகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் என்றால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, அந்த பள்ளி நிர்வாகத்தினர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல புழுதிவாரி இறைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
தமிழக முதல்வர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். தேர்தல் பரப்புரையின்போது கூட, நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிராமணர்களுக்கு எதிரானவன் இல்லை என்று கூறியிருந்தார். எனவே, அந்தப் பள்ளியின் மீது இனத் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும், அந்த குழுவின் அறிக்கையை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.