(Source: ECI/ABP News/ABP Majha)
தூத்துக்குடி : வசவப்பபுரம் பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
வசவப்பபுரம் பரம்பில் முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்
தமிழக தொல்லியல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்துள்ள ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருட்கள் வெளியே தெரிய வந்துள்ளன.இந்த கிராமத்தில் பெரிய பரம்பு பகுதி உள்ளது. இந்த பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு சாலை பணிக்காக ஜேசிபி மூலம் மணல் எடுத்துள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் புதையுண்ட முதுமக்கள் தாழிகள், மண் பாண்டங்கள் வெளியே தெரிந்துள்ளது. அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வெளியே தெரியவந்துள்ளது.
இந்த பரம்பு பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இந்த தாழிகளுக்குள் விதவிதமான ஜாடிகள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்கள் காணப்படுகின்றன. மேலும், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. இது குறித்து வசவப்பபுரம் கிராம மக்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இன்று இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து தொல்லியல் ஆர்வலரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, தாமிரபரணி கரையோரம் மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்தப் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரி நியமனமும் செய்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த பணிகள் தடைப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே முதல் கட்டமாக வசவப்பபுரம் பரம்பு பகுதியை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முறையான அறிக்கை அளித்து, அடுத்த நிதியாண்டில் இங்கும் அகழாய்வு செய்ய தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்றார்