RS Bharathi: பெரியார் சிலைகள் அகற்றப்பட்டால் பாஜக அவ்வளவு தான்.. அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி..!
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 56 வது நாளாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘பாஜக ஆட்சிக்கு வரும் நாளே இந்து சமய அறநிலையத்துறைக்கு (HR & CE) கடைசி நாளாகும். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றப்படும்’ என தெரிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திமுக சார்பில் நடைபெற்று வரும் நீட் ஒழிப்பு கையெழுத்து நிகழ்வானது வடசென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் இன்று நடத்தப்பட்டது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக தனது ஆதரவு கையெழுத்தை பதிவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘பெரியார் சிலை அகற்றப்படும்’ என அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி, ‘பெரியார் சிலை எடுத்துவிட்டு திருவள்ளுவருக்கு சிலை வைப்போம் என அண்ணாமலை பேசியது தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்பும் செயலாகும். முதன் முதலில் திருவள்ளுவருக்கும் பெரியாருக்கும் சிலை வைத்தது நாங்கள் தான். எங்கெல்லாம் பெரியார் சிலை உள்ளதோ அங்கெல்லாம் வள்ளுவர் சிலை இருக்கும். அதேபோல் எங்கெல்லாம் திருவள்ளுவர் சிலை உள்ளதோ அங்கெல்லாம் பெரியார் சிலையும் வைப்போம்’ என தெரிவித்தார்.
மேலும், ‘அண்ணாமலை பொய் சொல்வதும், தேவை இல்லாத கருத்தை தமிழ்நாட்டில் பேசுவதும் அவரது தொழிலாகும். பெரியார் சிலையை அகற்றினால் மத்தியில் இருந்து பாஜக அகற்றப்படும் என்பது உறுதி. பெரியாரின் கருத்துகள் தான் உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் இந்த கருத்தை அழிப்பவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் கூட பெரியாரின் கருத்துகளை மேற்கோள் காட்டி தான் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். மே மாதத்திற்கு பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக வெளியேற போகிறது. இந்தியா கூட்டணி தான் ஆட்சியமைக்கும்’ எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.