எந்த கூட்டணி? இன்னும் 3 நாட்களில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்! - தேர்தல் களம் குறித்து ராமதாஸ் பரபரப்பு தகவல்!
இன்னும் மூன்று நாட்களில் பாமகவின் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் - ராமதாஸ்!

விழுப்புரம்: தமிழக அரசியலில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் மூன்று நாட்களில் பாமகவின் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ். பாமகவில் 34 அமைப்புகள் உள்ளது. 34 அமைப்புகளும் பாமகவின் வளர்ச்சிக்காக உள்ளது. மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளைஞர் சங்கம், சமூக ஊடக பேரவை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அமைப்புகளை வழி நடத்துவது ஆங்காங்கே உள்ள கிளை, ஒன்றியம், பேரூர், வட்டம், மாவட்டம் என்ற அளவில் கட்சியை வளர்ப்பதற்கும், அமைப்புகளை ஒழுங்கு படுத்துவதற்கும், அமைப்புகள் வளர்வதற்கும், அமைப்புகளை கட்சி ரீதியாக எப்படி பயன்படுத்திக் கொள்வது குறித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறோம். நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறோம். அதற்காக அரசியல் பயிலரங்கை பயன்படுத்திக் கொள்கிறோம்.
பாமக இப்பொழுது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. எந்த கூட்டணியான கேள்வி கேட்கிறீர்கள். கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்வோம். உங்களுக்கு தெரியாமல் நடக்காது. உங்களுக்கு (ஊடகம்) தெரியப்படுத்துவோம். இதுவரை முடிவு செய்யவில்லை. அதனால் இப்போது அது(கூட்டணி) தொடர்பான உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
மாற்றங்கள் வருவது இயற்கை தான். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருப்போம். இன்னும் மூன்று நாட்கள் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை நீங்கள் பறைசாற்றுவீர்கள். இன்னும் மூன்று நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும். என தெரிவித்தார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இந்தத் திடீர் அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 'மாற்றங்கள் வருவது இயற்கை தான்' என்று அவர் குறிப்பிட்டிருப்பது, அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















