Inban Udhayanidhi: இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள்.. சஸ்பெண்ட் செய்த திமுக..
2 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள் இருவரை திமுக தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்ததால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். முதல்முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 2 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.
அது இந்த 2 ஆண்டுகளில் அளவுக்கதிகமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கு காரணம், நடிகராக தமிழ்நாடு மக்களுக்கு நன்கு பரீட்சையமான முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் அரசியல் வருகை தான். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பெரிய அளவில் பிரச்சாரம் செய்து மக்களிடையே வரவேற்பை பெற்ற உதயநிதி 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் ‘திமுக வாரிசு அரசியல்’ குறித்து பலமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையில் அடுத்து வாரிசு அரசியலின் வருகையாக உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி வரப்போகிறார் என பேச்சு பலமாக எழுந்தது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாத்தா மு.க.ஸ்டாலின், அப்பா உதயநிதி, மகன் இன்பன் உதயநிதி என அனைவரும் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
இப்படியான நிலையில், இன்பன் உதயநிதிக்கு திமுக நிர்வாகிகள் பாசறை தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் திருமுருகன், மணிமாறன் ஆகிய இருவரும் தான் இது தொடர்பான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல,போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து இன்பன் உதயநிதி பாசறை தொடங்கிய நிர்வாகிகள் திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகிய இருவரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.