நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய வழக்கு : எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் எச்.ராஜா மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. கடந்த சட்டசபை தேர்தலில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவர் கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், காவல்துறையினர் அந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், ஊர்வலத்தில் பங்கேற்ற எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், சென்னை உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசினார்.
அப்போது, அவரது பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. மேலும், நாட்டின் உயரிய அமைப்பான உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தது. வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, இந்த வழக்கை விசாரித்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த நீதிமன்றம், இரு மாதங்களில் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், 2018-க்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதிக்குள் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, உடனடியாக அந்த குற்றப்பத்திரிகையின் நகலை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கடந்த சில ஆண்டுகளில் எச்.ராஜா உயர்நீதிமன்றம் மட்டுமின்றி, பெரியார், திராவிட கொள்கைகள், தி.மு.க. வினர் உள்பட பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததும், அதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜக்கி வாசுதேவ் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்ததுடன், இந்து சாதுக்கள் மீது குற்றம் சாட்டுபவர்களின் பின்னணியை தோண்டுவோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கோவை : 1227 பேருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை ; 17 பேர் உயிரிழப்பு..!