கரூரில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி - வெற்றியாளர்களுக்கு பரிசளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

கரூரில் குறு வட்ட அளவிலான தடகளப் போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கரூர் அடுத்த தாந்தோணிமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குறு வட்டத்திற்குட்பட்ட 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவர்கள் 14,17,19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தடகள போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் வெற்றியாளர்கள் கரூர் மாவட்ட அளவிலான போட்டியிலும், அதன் பின் மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகளிலும் பங்கு பெற உள்ளனர்.

இந்தப் போட்டியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் ஏற்பாடுகளை செய்திருக்கக்கூடிய மாவட்ட உடற்கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வணக்கத்தை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன். படிக்கிற காலத்திலேயே பாடம் சொல்லக்கூடிய ஆசிரியர்களோடு பழகியதை விட அதிகமாக எனக்கு உடற்கல்வி ஆசிரியர்களோடு இருக்கக்கூடிய பழக்கம், நெருக்கம் அவர்கள் இன்று வரை என்னை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். எனது நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இரண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, மூன்றாவது 100 மீட்டர் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பேசிய அமைச்சர், மிகச் சிறப்பாக நம்முடைய சகோதரர்கள் தம்பிமார்கள் எழுச்சியோடு இந்த விளையாட்டுப் போட்டியில் கவந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பொழுது குறுவட்ட அளவிலான போட்டிகள் முடிந்த பிறகு மாவட்ட அளவிலான போட்டிகள் அதற்குப் பிறகு அதிலே வெற்றி பெறக்கூடியவர்கள் மாநில அளவிலான போட்டிகள் என தொடர்ச்சியாக பங்கு பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடிய இது ஒரு அடித்தளம். தமிழகத்தின் முதலமைச்சர் 2021 மே மாதம் ஏழாம் தேதி தமிழகத்தினுடைய முதலமைச்சராக ஆட்சி பொறுப்பை ஏற்றார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு துறைகள் வாரியாக எந்த அளவிற்கு மேம்படுத்த முடியும் அந்தளவு மேம்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக அதிலும் பள்ளிக்கல்வித்துறையை எப்படி சிறப்பாக இந்தியாவில் முதன்மை மாநிலமாக மேம்படுத்திய முடியும் என்ற சீரிய நோக்கத்தோடு நிதிநிலை அறிக்கையில் ஏறத்தாழ ரூ.36,000 கோடி அளவிற்கான நிதிகளை வழங்கினார் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.





















