தமிழ்நாட்டின் ஊடகங்கள் யார் பக்கம் நிற்கவேண்டும்? - கவிதா முரளிதரன்..
கட்சி சார்ந்த ஊடகங்கள் கோலோச்சும் இந்த காலத்தில், மக்கள் அதை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார் ஆங்கில இணைய ஊடக நெறியாளர்.

சமீபத்தில் ஒரு ஆங்கில இணைய ஊடகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் தேர்தல் நோக்கில் தமிழக ஊடகங்கள் என்கிற தலைப்பில் பேசினோம். கலந்துரையாடலை நெறியாள்கை செய்தவருக்கு பல சந்தேகங்கள். கட்சி சார்ந்த ஊடகங்கள் கோலோச்சும் இந்த காலத்தில் மக்கள் அதை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கும், கலந்துரையாடலில் பங்குகொண்ட இன்னொரு தோழரான பிரபாகருக்கும் ஒரே பதில்தான்: தமிழர்கள் தெளிவானவர்கள். ஊடகங்களில் வரும் செய்திகளை அவர்களால் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றோம். டீக்கடைகளிலும் சலூன்களிலும் அரசியல் பேசும் ஒரு சமூகத்திடம் இருக்கவேண்டிய தெளிவே அது.
அந்த தெளிவுதான் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஊடகங்களின் பலம். கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம், அரசியல் நெருக்கடிகள் தாண்டி வெகுஜன ஊடகங்கள் ஓரளவாவது உண்மையை பேசுவதற்கு காரணம், சில வட இந்திய ஊடகங்கள் போல பிரச்சாரம் செய்தால் மிக எளிதாக அம்பலமாகிவிடுவோம் என்பதுதான்.
ஒரு உதாரணம் சொல்லலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வட இந்திய ஊடகங்கள் பலவற்றில் ஒரு செய்தி வந்திருந்தது. ஹார்வார்ட் பல்கலைகழகம் செய்த ஆய்வின் அடிப்படையில் கொரோனா மற்றும் புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளை உத்தரபிரதேச அரசு மிகச்சிறப்பாக கையாண்டதாக செய்தி. ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற முக்கியமான ஊடகங்களில் வந்த அந்த செய்தியில் ஆய்வின் தலைப்பு, செய்தவர் யார் என்று எந்த தகவலும் இல்லை. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வை பத்திரிக்கைகளில் வெளியிட்டது உத்தரபிரதேச அரசு. அறம் என்றெல்லாம் கூட பேச வேண்டாம். ஊடகவியலின் அடிப்படை பாடத்தை மறுக்கும் ஒரு செயல்பாடு இந்தச் செய்தி வெளியீடு. ஊடகவியலின் பாடமாக பல கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் அடிப்படை விஷயம் கேள்விகளை எழுப்புவதுதான்.
சாதாரண ஒரு செய்திக்கு கூட யார், எங்கு, எப்படி, ஏன், எப்பொழுது என்ற கேள்விகளுக்கு குறிப்பில் பதில் இருக்கவேண்டும் என்பதுதான் அடிப்படைப்பாடம். ஆனால் அந்த பாடம் கூட இந்த செய்தி வெளியீட்டில் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற ஒரு நிலை தமிழக ஊடகங்களில் ஏற்படாது. அதற்கான சாத்தியங்கள் உண்மையிலேயே குறைவு என்று சொல்லலாம். இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டிலிருந்து எதாவது ஒரு ஊடகத்தில் வெளியாகியிருந்தால் அது உடனடியாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும்.

ஆனால் அது மட்டுமே ஊடகங்கள் மிக சிறப்பாக இயங்குவதற்கான சான்று என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? சில வட இந்திய ஊடகங்களை விட சற்றே மேம்பட்டிருப்பதால் தமிழக ஊடகங்கள் சிறப்பானவை என்று சொல்ல முடியுமா? தமிழக வெகுஜன ஊடகங்கள் சரியான திசையில்தான் பயணிக்கிறதா?
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நாளான ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று பல முன்னணி பத்திரிக்கைகளில் செய்தியைப் போலவே விளம்பரங்கள் வெளியாகின. ஒரு கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தின் நான்காம் பக்கத்திலேயே அது விளம்பரம் என்று மிக சிறிதாக குறிப்பிடப்பட்டிருந்தது. செய்திக்கும் விளம்பரத்துக்கும் வித்தியாசம் தெரியாத விதத்தில் வெளியிடுவது எப்படி சரியான ஊடக செயல்பாடாக இருக்க முடியும்?
இது குறித்து நிகழ்ந்த விவாதங்களில் வெளியான ஒரு முக்கியமான கருத்து: அவை advertorial. அதாவது செய்தியைப் போல வெளியாகும் விளம்பரம். அட்வர்டோரியல் என்பது தமிழ் ஊடக பண்பாட்டில் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட விளம்பரத்தின் பிரச்னை, அது அட்வர்டோரியல் என்று சொல்லவில்லை என்பதே. வெகுஜன ஊடக செயல்பாட்டின் வீழ்ச்சியாகவே இந்த பிரச்னையை நான் பார்க்கிறேன்.

தவிர தமிழக ஊடகங்கள் விவாதத்திற்கும் உரையாடலுக்கும் எடுத்துக்கொள்ளும் பிரச்னைகள் எத்தகையவை? மக்கள் பிரச்னைகள் பேசு பொருளாகும்போது மட்டுமே ஊடகங்கள் அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்கின்றன என்பது எனது பொதுவான நம்பிக்கை. எப்போதாவது கவனம் பெறாத பிரச்னைகளுக்கும் கொஞ்சம் இடம் கிடைக்கும்போது அது ஊடகத்தின் போக்காக இல்லை, அங்கு பணிபுரியும் தனிப்பட்ட செய்தியாளர்களின் ஆர்வமே காரணம் என்பதே எனது ஆழமான நம்பிக்கை. உண்மையில் ஊடகங்கள் என்ன விதமான பணியை செய்யவேண்டும்? பேசுபொருளாகும் பிரச்னைகளை விவாதத்திற்கு எடுப்பதை விடுத்து மக்கள் பிரச்னைகளை பேசுபொருளாக்குவதே ஊடகத்தின் அசலான பணி. ஆனால், அது இங்கு நடக்கிறதா?
எனில் கடைசியில் அரசியலுக்கே கடைசியில் வராத ஒரு நடிகர் பற்றி இந்த ஊடகங்கள் எத்தனை விவாதங்கள் நடத்தியிருக்கும்? சமூகத்திற்கு அதனால் என்ன பயன் நிகழ்ந்திருக்கும்? அவர் வாய் திறந்து பேசினாலே தலைப்பு செய்தி என்கிற அளவில்தான் ஊடக செயல்பாடுகள் இருந்தன. ஐந்து வருடங்களில் தோராயமாக 200 என்கிற அளவில் நடந்திருக்கும் சாதி ஆணவக் கொலைகள் பற்றி தமிழக ஊடகங்கள் எவ்வளவு, எத்தகைய விவாதங்களை முன்னெடுத்திருக்கின்றன? சாதி ஆணவக் கொலைகள் பற்றி எத்தனை பேட்டிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை தலையங்கங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன? கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மரணங்கள் அதிகம் நிகழ்கின்றன. இந்த அவலம் பற்றி எத்தனை தலையங்கங்கள், விவாதங்களை தமிழின் வெகுஜன ஊடகங்கள் முன்னெடுத்திருக்கின்றன?
சமீபத்தில் வேலை நிமித்தம் விழுப்புரம் சென்றிருந்த போது அந்த மாவட்டத்தில் கரசானூர் என்கிற ஊரில் கடந்த டிசம்பர் மாதம் இருளர் மக்கள் வாழும் 14 வீடுகள் ஒரு தீவிபத்தில் நாசமாகியிருந்ததை பார்க்க முடிந்தது. மூன்று மாதங்கள் கழித்து அங்கு நான் போனபோது மாற்று இடம்கேட்கும் அவர்களது போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. கருகிய எச்சங்களுக்கிடையில் தற்காலிகமாக கூடாரங்களை அமைத்து மக்கள் தங்கிக்கொண்டிருந்தார்கள். எத்தனை ஊடகங்கள் அவர்களது பாடுகளை பேசுபொருளாக்கியிருக்கின்றன?
விளம்பரம் மற்றும் பரபரப்பென்னும் இரட்டை குதிரை மீது சவாரிசெய்வதுதான் தமிழக ஊடகங்களின் இன்றைய நிலை. இந்த ஊடக செயல்பாடென்னும் இருள் பாதையில் வெளிச்சக்கீற்றாக அவ்வப்போது தோன்றுவது யூட்யூப் செய்தி தளங்கள் மற்றும் மாற்று இணைய ஊடகங்கள்.. ஊடகத்தின், ஊடக அறத்தின் மீதான நம்பிக்கையை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இந்த மாற்று ஊடக செயல்பாடுகளே.
கட்டுரையாளர்: கவிதா முரளிதரன், மூத்த பத்திரிகையாளர்





















