பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு - வலியிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்!
மாரடைப்பு ஏற்பட்டபோதும் சமயோசிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
ஈரோட்டில் அரசு பேருந்தை இயக்கி கொண்டிருந்த ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். சமயோசிதமாக செயல்பட்ட அவர், பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்ததால் பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூருக்குச் செல்லும் அரசு பேருந்தை பழனிசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். ஈரோடு பேருந்து நிலையம் வந்தடைந்து பயணிகளை ஏற்றிய அந்த பேருந்து, திருப்பூரை நோக்கி பயணப்பட ஆரம்பித்தது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்தனர்.
ஈரோடு திண்டல் பகுதியை அடைந்தபோது, பேருந்தை இயக்கி வந்த பழனிசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், பேருந்து நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி உள்ளது. உடனே, சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுனர் பழனிசாமி, பிரேக் பிடித்து சாலையின் தடுப்புச் சுவரில் இடித்து பேருந்தை நிறுத்தினார். இதனால், பேருந்தின் முன்பகுதி பாதிப்படைந்து சேதமடைந்தது.
பதற்றம் அடைந்த பயணிகள், பேருந்து நின்றவுடன் கீழே இறங்கி உள்ளனர். அதனை அடுத்து, மாரடைப்பால் வலியில் இருந்த ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாரடைப்பு ஏற்பட்டபோதும் சமயோசிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பெரும் விபத்து ஏற்பட்டிருந்தால், அதிக உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். விபத்தை தடுக்கும் வகையில் செயலாற்றி மக்களை காப்பாற்றிய ஓட்டுனர் விரைவில் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என பயணிகள் வேண்டுகின்றனர்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் மதுரையில் இதே போன்ற சம்பவம் நடந்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனை ஓட்டுநர் ஆறுமுகம் இயக்கினார். தொடர்ந்து பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டேரிங் மீது விழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்