நாகையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் 75 ஆயிரத்து 630 ரூபாய் பணம் சிக்கியது.
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் 75 ஆயிரத்து 630 ரூபாய் பணம் சிக்கியதன் எதிரொலியாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும், 17 போலீசாரை திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்தும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சித்திரவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் சிக்கியது.
கணக்கில் வராத 75 ஆயிரத்து 630 ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் சரோஜினிடம் உள்ளிட்ட போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். துறை ரீதியான நடவடிக்கையாக ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும், அங்கு பணிபுரியும் 17 காவல்துறையினரை தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் ஆணை பிறப்பித்தும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: கரூரில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்