Amul vs Aavin: "ஆவினுக்கு எதிரானது அல்ல அமுல்...நாங்கள் ஒன்றும் போட்டியிடவில்லை” - அமுல் நிறுவனம் விளக்கம்...!
முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய நிலையில் அமுல் நிறுவனம் விளக்கம்
Amul vs Aavin: ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமுல் VS ஆவின்
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களான ஆரோக்கியா, திருமலா போன்றவைகளின் பால் விலைகளை விட ஆவின் நிறுவன பால் குறைவு என்பதால் அதிகமான மக்கள் ஆவின் பாலையே வாங்குகின்றனர். இதற்கிடையில், பால் உற்பத்திக்கான விலைவாசியும் அதிகரித்த நிலையில், பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து, கடந்த சில மாதங்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேவையான அளவுக்கு ஆவின் பால் விநியோகம் இருப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வெளிவந்தன. தமிழக அரசின் இதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தற்கான பணியை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டில் பால் கொள்முதலை துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி தரும்புரி. வேலூர். இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சியும் மற்றும் திருவள்ளூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்து வருகிறது.
எனவே, இந்த விவகாரத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அமுல் விளக்கம்
இதற்கு அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ”ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்றும் கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்கிறோம் என்றும் அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற விதிகள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகள் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது" என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.