Anbumani: 37 வருஷமாச்சு.. பாமக இன்னும் மத்தவங்களை எதிர்பார்க்குது.. அன்புமணி ராமதாஸ் வேதனை!
பாமக தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மகிட்ட என்ன இல்லை என சொல்லுங்க. இங்கு இருக்கும் கட்சிகளில் மிகச்சிறந்த கொள்கை பாமகவிடம் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிலவும் உட்கட்சி பூசல்களுக்கு திமுக தான் காரணம் என்றும், அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க மாநில பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் நம்ம கட்சியில் ஒரு 34 எம்.எல்.ஏ.,க்கள் வந்து என்னை எம்.பி.ஆ தேர்வு செஞ்சிருந்தா இதைவிட எதாவது ஒரு பெரிய சந்தோஷம் இருந்திருக்குமா சொல்லுங்கள். இன்றைக்கும் நாம் மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலைமையில் தான் இருக்கிறோம்.
பாமக தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மகிட்ட என்ன இல்லை என சொல்லுங்க. இங்கு இருக்கும் கட்சிகளில் மிகச்சிறந்த கொள்கை பாமகவிடம் தான் உள்ளது. மிகப்பெரிய செயல் திட்டம், தொலைநோக்கு பார்வை நம்மிடம் தான் உள்ளது. இளைஞர்கள் நம் பக்கம் தான் உள்ளனர். நீங்களெல்லாம் போராளிகள். தமிழ்நாட்டில் எவ்வளவு சாதனைகள் நாம் செய்திருக்கிறோம். ஆனால் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடையாது. நமக்கு பின்னால் தொடங்கிய, தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத கட்சிகளுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின், மகளிர் சங்க மாநில பொதுக்குழு, சென்னையில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களுடன் பங்கேற்று உரையாற்றிய போது.! @Sowmiyanbumani pic.twitter.com/4YH9WAsEdh
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 10, 2026
எனக்கு ஒரு பக்கம் வேலைப்பளு இருந்தாலும், இன்னொரு பக்கம் மனதில் நிறைய பளு இருக்கிறது. இந்த 6 மாதத்தில் நடப்பதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. என் மனைவி, மகள்களுக்கு மட்டும் என் நிலைமை தெரியும். திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என சொல்வதற்கு காரணம் என்னவென்று கேட்டால், நம்முடைய நல்லா இருந்த குடும்பத்தை அவர்கள் தான் பிரித்து இப்படியான கேடுகெட்ட நிலைமைக்கு கொண்டு வந்தது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இதுதான் திமுகவின் கடைசி தேர்தல்.
என்னுடைய குடும்பம் என்றால் கட்சியினர் தான். அவர்கள் தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி இப்படியான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். இந்த தேர்தலில் நம்முடைய கோபத்தை எல்லாம் திமுக மேல் காட்ட வேண்டும்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் விரைவில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாமகவில் ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் பாமக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொடர்ச்சியாக தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















