Actor Karthi: படிப்ப மட்டும் விட்டுடாத சிதம்பரம்.. வீட்டில் ஒருவர் படித்தால் தலைமுறையே முன்னேறும் - நடிகர் கார்த்தி
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா வழங்கினார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா வழங்கினார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், நடிகர் கார்த்தி பேசியதாவது, “நாம் இன்றைக்கு இருப்பது மிகவும் முக்கியமான காலகட்டமாக கருதுகிறேன். இந்த காலத்தில் அனைவருக்கும் கல்வியின் அவசியம் குறித்து தெரிந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூபாய் 50, 60 என சம்பாதிக்கும் பெற்றோர்கள் கூட தங்களது குழந்தைகளின் படிப்புக்காக அதனை சேமித்து வருகின்றனர். தங்களது குழந்தைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
70 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு இல்லை. அப்போதெல்லாம் வருடத்தில் இரண்டு முறைதான் மழை பெய்யும். ராகி , கம்புதான் விளையும் அப்படி இருக்கும் ஊரில் ஒருவர் உயிர்வாழ்வதே சிரமம். அப்படிப்பட்ட காலகட்டத்தில் கல்வி என்பதே முக்கியத்துவமில்லை. அப்படிப்பட்ட ஊரில் குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டால் அங்கு சின்ன பள்ளிக்கூடம் (துவக்கப்பள்ளி) தான் இருக்கும், அங்கு ஊரில் பூஜை செய்பவர்கள் தான் மண் குவித்து அதில் எழுத கற்றுக்கொடுப்பார்கள். இப்படிதான் கல்வியை அந்தக் காலத்தில் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் பள்ளிக்கு போகவேண்டும் என்றால் அருகில் பள்ளி இருக்காது 2 முதல் 3 கிலோமீட்டர்கள் நடந்து சென்றுதான் படிக்கவேண்டும். அங்கு இருக்கும் ஆசிரியர்களும் முறையாக படித்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதன் பின்னர் மேல் படிப்புக்கு வேறு பள்ளிக்குச் செல்லும்போது ஒரு ஊரில் இருந்து 30 மாணவர்களை சேர்த்துவிட்டால் 10ஆம் வகுப்பு முடிக்கும்போது அதில் இருந்து ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் மிகப்பெரிய விஷயம்.
அப்படி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர் உயர்கல்விக்குச் செல்லவேண்டும் என்றால், யாராவது உதவி செய்ய வேண்டும். கல்வியே முக்கியமில்லாத காலத்தில் யார் படிக்கவைப்பார்கள். அப்படி வீட்டில் ஒருவரை படிக்க வைக்க வேண்டும் என்றால், வீட்டில் உள்ள பெண் குழந்தையின் படிப்பை பாதியில் நிறுத்தவேண்டி இருக்கும். வீட்டில் ஆண்மகன் படிக்கட்டும் என அப்போது நினைத்தார்கள். அப்படி உள்ள ஆண் குழந்தைக்கு உறவினர்களில் ஒருவர் உதவ, தனக்கு மிகவும் பிடித்த படம் வரையும் படிப்பை படித்தார். அப்படி தனக்கு பிடித்த படிப்பை ஒருவர் படித்தால் அவரது குடும்பம் மட்டுமல்ல அவரது தலைமுறையே நன்றாக இருக்கும். அதற்கு இந்த மேடையில் உள்ளவர்கள் தான் சாட்சி. அப்படிதான் எனது அப்பா (நடிகர் சிவக்குமார்) படித்து சென்னைக்கு வந்துள்ளார்.
சிவக்குமார் அறக்கட்டளை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1979 துவங்கப்பட்டது. 1980 முதல் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் 25 ஆண்டுகள் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்துவிட்டு அதனை அகரத்திடம் கொடுத்துவிட்டார். இப்போது 44 ஆண்டுகள் வெற்றிகரமாக உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அகரம் தொடங்கிய பின்னர் மாணவர்கள் எந்த சூழலில் இருந்து படிக்கிறார்கள் என்பது குறித்து யோசித்து அவர்களின் உயர்கல்விக்கு உதவி வருகிறது அகரம்.