தடையில்லா பால் விநியோகத்துக்கு 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம் : ஆவின் நிறுவனம்
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பால் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையத்தை ஆவின் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா காரணமாக ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான பால் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், பால் மற்றும் உபபொருட்கள் கிடைக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகள் ஆவின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் சுமார் ஆயிரம் பால் டெப்போக்கள் மூலம் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆவின் நி்ரவாகத்தால் 38 பாலகங்கள் மூலம் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, நகரின் பிரதான பகுதிகளில் 156 ஆவின் பாலகங்கள் முகவரால் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் பால் விநியோகம் செய்வதற்காக 20 நடமாடும் பால் விற்பனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தற்காலிக பால் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமில்லாமல், 27 வட்டார அலுவலகங்கள், 48 பால் கூட்டுறவு நுகர்வோார் சங்கங்கள் தற்காலிக பால் விற்பனை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் தற்காலிக விற்பனை மையம் அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. அனைத்து மாவட்ட ஆவின் பாலகங்களில் போதிய பால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கெடாத டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஆவின் பாலகங்களிலும் போதிய இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்கு ஜோமோட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தினசரி 600-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டு, மூன்று லட்சம் மதிப்புள்ள பால் உபபொருட்கள் விற்கப்படுகிறது. சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற சென்னையில் உள்ள அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் உள்ள பால் பாக்கெட்டுகள் உற்பத்தி 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி நடப்பதை கண்காணிக்க 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பகுதிவாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-2346 4575, 2346 4576, 2346 4578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 425 3300 ஆகும்.