சேலம்: பிரபல உணவகத்தில் பிரியாணிக்கு வைக்கப்பட்ட தால்சாவில் புழு: வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்
சேலத்தில் பிரபலமான உணவு கடையில் பிரியாணிக்கு வைக்கப்படும் தால்சாவில் புழு இருந்ததால் பரபரப்பு. உணவு சாப்பிட வந்தவர்கள் கடைக்காரரிடம் கடும் வாக்குவாதம்.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஐந்து ரோடு அருகே பிரபல பிரியாணி கடையான ஏ.எம் பிரியாணி கடை உள்ளது. அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நண்பர்களுடன் கடையில் இன்று மாலை சாப்பிட வந்து சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளனர். அப்பொழுது பிரியாணி தால்சா எனப்படும் குழம்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருவருடைய தட்டில் தால்சாவில் புழு ஒன்று இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடை ஊழியர்களை அழைத்து குழம்பில் புழு உள்ளது. யாருக்கும் இதை பரிமாறவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பொருட்படுத்தாமல் கடை ஊழியர்கள் பிற வாடிக்கையாளர்களுக்கும் குழம்பு வழங்கியதால் கோபமடைந்த அவர் கடையின் உரிமையாளர் அழைத்து வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கடையில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவை சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கூறுகையில், ”எனது நண்பர்களுடன் உணவு அருந்த கடைக்கு வந்ததாகவும், உணவில் புழு இருந்ததை கண்டவுடன் கடையின் ஊழியரிடம் தெரிவித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தாமல் அருகில் இருந்தவர்களுக்கு அதே குழம்பை பரிமாறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தேன். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். புழு இருந்த குழம்பை சாப்பிட்ட எங்களுக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தரமான உணவு கொடுக்காத இந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனிடையே கடையின் உரிமையாளர் கூறும்போது, “உணவகத்தில் உணவு உட்கொண்டு விட்டு அதற்கான பணம் கேட்டபோது வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும், இதனிடையே பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். இது முதல் முறையல்ல பலமுறை இது போன்று ஐந்திலிருந்து பத்து நபர்கள் வரை அழைத்து வந்து சாப்பிட்டுவிட்டு உணவில் குறை உள்ளதாக கூறி பணம் செலுத்தாமல் செல்வார்கள். அதே போன்று தான் இன்றும் ஆறு பேருடன் வந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி வருகிறேன். இவர்களைத் தவிர வேறு யாரும் இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவதில்லை. மேலும் தங்களது உணவு தரம் குறித்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்று கூறினார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் அழைத்தவுடன் வந்த காவல்துறையினர் புழு இருந்ததாக குற்றம் சாட்டிய வாடிக்கையாளர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.