மேலும் அறிய
’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!
மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார்

தீக்குளிக்க முயன்ற விவசாயி
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி என்பவர், தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு மின்சார இணைப்பு பெற கடந்த 1997ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது பதிவு மூப்பு அடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் பழனிசாமியை அலைக்கழித்துள்ளனர்.
பிறகு 50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50 ஆயிரம் லஞ்சமாக வழங்கி உள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 50 ஆயிரம் போதாது, மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என விவசாயி கூறியதால் மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர்.

ஆனால் பழனிச்சாமிக்கு பின்னர் மனு கொடுத்த பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தண்ணீரில்லாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பழனிசாமி, தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து, இலஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பழனிச்சாமியை பாதுகாப்பாக மீட்டு, அழைத்து சென்றனர். தொடர்ந்து இலவச மின்சாரம் வேண்டி, 24 ஆண்டுகளாக போராடியும் அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற நியாமான வழியில் முயற்சித்தும் அதிகாரிகளின் லஞ்ச வெறி காரணமாக விவசாயி பழனிசாமி தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மீதும் தொடர்ந்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















