அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விட ஈபிஎஸ் சிறப்பாக ஆட்சி செய்தார் - அர்ஜூன் சம்பத்
திமுக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசு என தெரிவித்து வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" அடிப்படையில் இன்னும் ஒரே ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம்
சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநில தேர்தலில், 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகியின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்ததுதான். யோகியின் ஆட்சியில் உத்தரப் பிரதேசம் மாநில மக்கள் அவதிப்படுவதாக தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அதை அனைத்தையும் முடித்துக் காட்டி, ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் யோகியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்செய்யப்பட்டு 400க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் செய்யப்பட்டன. யோகியின் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கையால்தான் மக்கள் மீண்டும் யோகிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். இதனால் யோகிக்கு எதிராக குரல் எழுப்பி வந்த அனைவரும் தற்போது தலை குனிந்துள்ளனர்.
இனி மத்தியில் காங்கிரஸ் மீண்டும் வராது. பஞ்சாப்பில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது தோற்றுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தினால்தான் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி பெற்றுள்ளது நிரந்தர வெற்றியல்ல என்று கூறினார். திராவிட மாநிலம் எனும் பெயரில் இருந்து தமிழகம் நிச்சயம் விடுபடும். மக்களிடம் தவறான கருத்துக்களை முன்னிறுத்தியே திமுக வெற்றி பெற்றவர். இந்த ஒன்பது மாத ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் திமுகவை பற்றி தெரிந்து கொண்டனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. காங்கிரஸை நம்பி திமுக மோசம் போக கூடாது. சமீபகாலமாக இந்து மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஜனநாயக உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது இத்தகைய நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி அமையும். 5 மாநில தேர்தல் முடிவுகள் போல தமிழகத்திலும் மாற்றம் வரும். திமுக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசு என தெரிவித்து வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" அடிப்படையில் இன்னும் ஒரே ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என்றார். அதிமுகவில் சசிகலா தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது ஊடகங்கள் மட்டுமே கூறி வருகின்றது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுத்தனர். இதனால் தமிழகத்தில் அதிமுக வலுவாக உள்ளது. இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளனர் என்று அர்ஜுன் சம்பத் புகழ்ந்தார்.