'திமுக அரசு அம்மா மினி கிளினிக்கை மூடும் சூழலை உருவாக்கியுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
7 பேர் விடுதலை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை; இவ்விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் எண்ணம் திமுகவிற்கு இல்லை என்றும் விமர்சனம் செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு தாக்கல் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய நான்கு மண்டலத்திற்கான விருப்பமான விநியோகத்தை தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது, அம்மா மினி கிளினிக் திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.திமுக அரசு அம்மா மினி கிளினிக்கை மூடுகின்ற சூழலை உருவாக்கி உள்ளனர். அம்மா மினி கிளினிக் மருத்துவர்களை நிறுத்தும் போக்கை அரசு கைவிட வேண்டும். அம்மா மினி கிளினிக்கில் 1850 மருத்துவர்கள், 1420 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் கனமழையால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். புதிதாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீட்டு தொகையை அரசு பெற்று தர வேண்டும் என்றார். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் பயிர் முளைத்துள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு சேதமின்றி நெல்லை பாதுகாக்க வேண்டும். நகர்புறத்தில் தேங்கிய தண்ணீரை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். திறமையில்லாத அரசு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வில்லை. எவ்வித அத்தியாவசிய தேவைகளையும் ஏற்படுத்தி தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஏழை எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தையும் மூட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்பட்டது. கருங்கல்பட்டியில் நடந்த சிலிண்டர் வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சேதமடைந்த வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். மேலும் அதுவரை அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரண தொகை 2 லட்சம் வழங்க வேண்டும். லேசான காயத்திற்கு 1 லட்சம் வழங்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை; இவ்விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் எண்ணம் திமுகவிற்கு இல்லை. வேதா இல்லம் குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கூறினார்.
அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர்கள் மீது வழக்கு தொடர்ந்தும் மிரட்டியும் திமுகவில் இணைய செய்கின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடி தனமாக செயல்பட்டு வருகிறார். மற்றும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர அதிமுக வலியுறுத்துவோம் என்றும் பேசினார்.