Chess Olympiad 2022: சேலத்தில் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்காக நடந்த செஸ் போட்டி
சேலம் மாவட்டத்தின் சார்பில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இன்று (28 ஆம் தேதி) தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டலாம்பட்டி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகன பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி சேலம் - ஏற்காடு செல்லும் மலைப்பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தடுப்பு சுவரில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்திற்காக செஸ் போர்டு போன்ற ஓவியம் வரையப்பட்டுள்ளது. சேலம் மாநகர் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட விளம்பரப்பு பலகைகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் என பதிவிட்டுள்ள ராட்சத பலூன், நகரின் பல்வேறு இடங்களில் போட்டோ பாயிண்ட் உள்ளிட்ட விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவையில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தீபச்சுடர் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தீபச்சுடர் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சேலம் மாவட்டத்தின் சார்பில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சேலம் ஆவின் பாலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தயாரிக்கப்பட்ட அனைத்து பால் பாக்கெட்களிலும் செஸ் ஒலிம்பியாட் குறித்து அச்சிடப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 378 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ள உள்ளனர். சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Chess Olympiad 2022: சேலத்தில் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்காக நடந்த செஸ் போட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்