Ramadan 2022: நோன்பும், நோன்பின் மாண்பும்.. சமத்துவத்தையும் ஈகையையும் போற்றும் பெருநாள்!
பெருநாள் சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, ஒவ்வொருவரும் பிறரை ஆரத்தழுவி கட்டியணைத்து `ஈத் முபாரக்’ எனக் கூறி, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
30 நாள்கள் நோன்பு இருந்து, பசித்தும் தாகித்தும், தன்னிடம் இறையச்சத்தைப் பேணியும், மனக்கட்டுப்பாடு, புலன்களை அடக்குதல் முதலானவற்றைக் கற்றுக் கொள்ளும் பயிற்சிக் காலமாக அமைகிறது ரமலான் மாதம். ரமலான் மாதம் முடிவடைந்த மறுநாளில் வானில் பிறை பார்த்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது ஈகைப் பெருநாள்.
ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் ரமலான் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் நோன்பும், பெருநாளின் கொண்டாட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இவை முகமது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட வழக்கம் ஆகும். நபியவர்கள் மக்காவில் இருந்து மதீனா நகரத்திற்குப் புலம் பெயர்ந்த பிறகு, இந்தப் பண்டிகை முக்கியத்துவம் பெற்றதாகக் கூறுவோர் உண்டு.
அந்தந்த நாட்டின் புவியியலைப் பொருத்து, பிறை தென்பட்ட மறுநாள் பெருநாளாகக் கடைபிடிக்கப்படும். 30 நாள்கள் ரமலான் மாதத்தின் நோன்பு இருந்த போதும், பெருநாள் அன்று நோன்பு கடைபிடிப்பதற்குக் கட்டாயத் தடை விதித்துள்ளது இஸ்லாம். மேலும், பெருநாளின் போது சிறப்புத் தொழுகை, ஈகை முதலானவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
“நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்” என்ற நபியவர்களின் கூற்றின்படி, நோன்பும், பெருநாளும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.
ஒரு மாதம் முழுவதும் நோன்பு பிடித்து, இறைவனை வணங்கி, பசியை உணர்ந்து, ஏழைகளுக்கு `பித்ரா’ என்றழைக்கப்படும் கட்டாய தானத்தை அளித்த பிறகும், பெருநாளின் சிறப்புத் தொழுகை தொழுவதே நோன்புப் பெருநாளைச் சரியாக கடைப்பிடிக்கும் முறையாகும். மேலும், வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் சொத்து மதிப்பில் இருந்து 2.5 சதவிகிதத்தை தானமாக வறியோருக்குக் கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டாய கடமையும் ஈகைப் பெருநாளின் போது நிறைவேற்றப்படுகிறது.
நோன்புப் பெருநாளின் காலையில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்கு குளித்து, புத்தாடை அணிந்து, காலை உணவைக் கட்டாயமாக உண்டு, அதனோடு பேரீச்சம் பழங்களை ஒற்றைப் படை எண்ணிக்கையில் சாப்பிட்டு, தொழுகைக்காக மக்களோடு மக்களாக திடலில் அணியமாவார்கள். வழக்கமாக பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை, பெருநாளின் போது சிறப்புத் தொழுகையாக இருப்பதால், திடலில் நடைபெறும். தொழுகைக்கு முன்பு, நன்மைகளை ஏவியும், தீமைகளைத் தடுக்கவும் கோரும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். தொழுகைக்குப் பின்பு, உலகத்தின் அனைத்து உயிர்களின் நன்மையை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெறும்.
பெருநாள் சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, ஒவ்வொருவரும் பிறரை ஆரத்தழுவி கட்டியணைத்து `ஈத் முபாரக்’ எனக் கூறி, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
`அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கமும், `ஈத் முபாரக்’ என்ற வாழ்த்துச் செய்தியும் பெருநாளின் போது நிறைந்திருக்கும்; அவை ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாட்டையோ, வேறு பிரிவினைகளையோ கோராமல், இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும், பெருநாளின் மகத்தான வாழ்த்துகளும் அனைவரையும் சூழ்ந்திருக்க, அந்நாள் `பெருநாள்’ என்று மீண்டும் மீண்டும் மேன்மை பெறும்!